இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் அப்பகுதியில் இருந்து அலறி அடித்து ஓடினர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி லெனின் தெருவை சேர்ந்தவர் மேகலா (வயது 25). இவருக்கு பரமேசுவரன் என்பவருடன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
மேகலா தனது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அப்போது, மேகலாவுக்கு மணிகண்டன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பரமக்குடி பாரதிநகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர்.
இவர்களுக்குள் கடந்த ஒரு மாதமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மேகலா, மணிகண்டனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் மணிகண்டன் மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.
நேற்று மாலை 4 மணி அளவில், மேகலா தனது தாயார் வேலை பார்த்து வரும் பெரிய கடை பஜாரில் உள்ள கடை ஒன்றில் விற்பனைக்காக பணியாரம் சுட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மணிகண்டன், ஏன் என்னுடன் சேர்ந்து வாழ வர மறுக்கிறாய்? என கேட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரம் அடைந்த மணிகண்டன், மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக முதுகில் குத்தினார்.
இதில் மேகலா ரத்த வெள்ளத்தில் அந்த கடையின் வாசலில் விழுந்தார். உடனே அங்கிருந்து மணிகண்டன் தப்பி ஓட முயன்றார். இதை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். சிலர் துணிச்சலாக விரட்டிச்சென்று மணிகண்டனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர். இதற்கிடையே உயிருக்கு போராடிய மேகலா சற்று நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். துணை சூப்பிரண்டு சபரிநாதன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேகலா உடலை பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மணிகண்டனை கைது செய்து பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரமக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.