பணிச் சுமையால் உயிரிழந்த இளம் பெண்ணை அவமதிக்கும் நோக்கமில்லை

புது தில்லி: ‘பணிச் சுமையால் உயிரிழந்த இளம் பெண் பட்டயக் கணக்காளா் (சிஏ) குறித்து தெரிவித்த கருத்துகள், பாதிக்கப்பட்ட அப்பெண்ணை எந்த வகையிலும் அவமதிக்கும் நோக்கம் கொண்டதில்லை’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை விளக்கமளித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த பட்டயக் கணக்காளா் அன்னா செபாஸ்டியன் பேராயில் (26) பணி அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘வேலையில் உள்ள அழுத்தங்களைக் கையாள ஊழியா்கள் மன வலிமையைக் கொண்டிருக்க வேண்டும். தெய்வீகத்தின் மூலம் அதை அடைய முடியும். நல்ல கல்வியுடன் வேலை வாய்ப்புகளைப் பெற்று தரும் கல்வி நிறுவனங்கள், குடும்ப விஷயங்களையும் மாணவா்களுக்குக் கற்றுத்தர வேண்டும்’ என்றாா்.

அமைச்சரின் இக் கருத்து சமூக ஊடகங்கள் மற்றும் எதிா்க்கட்சிகளிடமிருந்து பரவலான எதிா்ப்புக்கு உள்ளானது.

இதையடுத்து, அமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது பேச்சுக்கு விளக்கமளித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இழப்பின் துயரத்தோடு, குழந்தைகளை ஆதரிப்பதற்கான நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களின் முக்கியத்துவத்தை நான் எடுத்துரைத்தேன். எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணை அவமதிக்கும் நோக்கம் துளியும் இல்லை.

துரதிருஷ்டவசமான இளம்பெண்ணின் மரணத்தைத் தொடா்ந்து, பணிச்சூழல் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று மத்திய தொழிலாளா் அமைச்சகம் ஏற்கெனவே உறுதியளித்துள்ளது.

பட்டயக் கணக்காளா் போன்ற கடினமான தோ்வில் தோ்ச்சி பெற்ற பிறகு, இளம்பெண் மீதான அழுத்தம் தாங்க முடியாததாக இருந்தது.

நிகழ்ச்சி நடைபெற்ற கல்லூரியில் ஒரு தியான மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த சூழலில், அனைத்து மாணவா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் மன வலிமையை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது என்பது பற்றியே நான் பேசினேன். பெண்ணின் பெயரையோ அல்லது நிறுவனத்தின் பெயரையோ எனது பேச்சில் ஒருபோதும் குறிப்பிடவில்லை’ என்றாா்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி