பணிச் சுமை! இளம் பெண் பட்டயக் கணக்காளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

புணேவில் பணியில் இருந்து வீடு திரும்பிய 26 வயது பட்டயக் கணக்காளர், படுக்கையில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவர் பணிபுரியும் பன்னாட்டு ஆலோசனை நிறுவனத்தில், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிச் சுமையால் ஏற்பட்ட அழுத்தத்தால்தான் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

புணேவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் பேராயில் என்ற 26 வயது இளம்பெண், பட்டயக் கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கடந்த மார்ச் 19ஆம் தேதி பணிக்கு சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 20ஆம் தேதி பணி முடிந்து விடுதிக்கு திரும்பிய அன்னா செபாஸ்டியன், கட்டிலில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அன்னா உயிரிழந்து 2 மாதங்களாகும் நிலையில், அவர் பணிபுரிந்த பன்னாட்டு நிறுவனத்துக்கு அன்னாவின் தாயார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பணிச் சுமையால் உயிரிழப்பு

அன்னாவின் தாயார், பன்னாட்டு நிறுவனத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

“அன்னாவின் முதல் பணி இது. உங்கள் நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரிய மிகுந்த ஆவலுடன் இருந்தார். ஆனால், 4 மாதங்களிலேயே அதிக பணிச் சுமையால் உயிரிழந்துள்ளார்.

இரவு நீண்ட நேரமும், வார இறுதி நாள்களிலும் வேலை செய்துள்ளார். பெரும்பாலான நாள்கள் மிகவும் சோர்ந்து போய் விடுதிக்கு திரும்பியுள்ளார். புதிதாக பணிக்கு சேர்ந்தவருக்கு முதுகெலும்பு உடையும் அளவுக்கான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வெறியாட்டம்! பேஜர்கள் வெடித்த விவகாரத்தில் லெபனான் குற்றச்சாட்டு

அன்னா, பள்ளி மற்றும் கல்லூரிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவார். பட்டயக் கணக்காளர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். உங்கள் நிறுவனம் கொடுத்த அனைத்துப் பணிகளையும் சோர்வின்றி செய்தார். இருப்பினும், பணிச்சுமை, புதிய சூழல் மற்றும் நீண்ட நேரப் பணி உள்ளிட்டவை அவளை உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதித்தது.

இந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த பல ஊழியர்கள், பணிச் சுமை தாங்காமல் ராஜிநாமா செய்துள்ளனர். அன்னாவின் மேலாளர் தொடர்ந்து பணி நேரம் முடிந்த பிறகு அவருக்கு வேலை ஒதுக்கினார். கூடுதல் நேரம் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.

இரவு நேரங்கள் மட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிபுரிய வைத்துள்ளனர். அன்னாவின், தகுதிக்கு மீறிய பல்வேறு பணிகளும் வழங்கப்பட்டது. வாய்மொழியாக பல பணிகள் ஒதுக்கப்படுவதாக எங்களிடம் அவர் தெரிவித்தார். மூச்சுவிடக் கூட நேரம் வழங்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இறுதிச் சடங்குக்குகூட வராத சக ஊழியர்கள்

மேலும், “அன்னாவின் இறுதிச் சடங்குக்கு கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. அவளது மேலாளருக்கு தகவல் கொடுத்தும் பதில் இல்லை” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக எனது குழந்தையின் உயிரிழப்பு அந்த நிறுவனத்தின் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாகவும், தாங்கள் அடைந்த துயரமும், அதிர்ச்சியும் வேறு குடும்பத்தால் தாங்க முடியாது என்றும் பன்னாட்டு நிறுவனத் தலைவருக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் 26 வயதே ஆன பட்டயக் கணக்காளர் பணிச் சுமையால் உயிரிழந்த சம்பவம், 2 மாதத்துக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்