பணி நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய டாக்டர்கள்: சிகிச்சைக்கு வந்த சிறுமி உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பதாவுன்,

உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ளது தலியா நஹ்லா கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த நசீம் என்பவரது மகள் சோபியா (வயது 5) கடந்த புதன்கிழமை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நசீம் அன்று பிற்பகலில் மகளை அழைத்துக் கொண்டு பதாவுன் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் யாரும் இல்லை.

இதற்கிடையே காய்ச்சலால் துடித்த சிறுமி பரிதாபமாக இறந்தாள். பின்னர்தான் பணியில் இருந்த டாக்டர்கள், அங்குள்ள வளாகத்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனால் அன்றைய தினமே கல்லூரி நிர்வாகம் 3 பேர் கொண்ட குழுவை விசாரணைக்காக அமைத்து உத்தரவிட்டது. அவர்களின் விசாரணையில் பணியில் இருந்த டாக்டர்கள் கிரிக்கெட் விளையாடியது உறுதியானது. அதுகுறித்து நேற்று முன்தினம் அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நேற்று நடவடிக்கை எடுத்தது. 2 ஒப்பந்த டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 2 அரசு டாக்டர்கள் ஒரு மாத காலத்திற்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

முன்னதாக சிறுமியின் தந்தை நசீம், குடும்பத்தினர் மருத்துவமனையை விட்டு வெளியேறியபோது, டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் கிரிக்கெட் போட்டியில் ஈடுபட்டிருந்ததைக் கண்டதாகக் கூறினார். உதவி கோரி பலமுறை கெஞ்சியும், அவரது மகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் பின்னர் சிறுமி பரிதாபமாக இறந்ததாகவும் அவர் கூறினார்.

டாக்டர்களின் அலட்சியத்தால் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

55,000+ இருக்கைகள், மாவட்ட வாரியாக ‘கேபின்’… – விஜய்யின் தவெக மாநாடு களத்தின் ஹைலைட்ஸ்

யூடியூபர் இர்ஃபான் வருத்தம் தெரிவித்து சுகாதாரத் துறைக்கு கடிதம்

Bhopal’s Deaf-Mute Kanishka To Represent India