பதற்றம் தவிர்த்து விழிப்போடு செயல்படுவோம்: துணை முதல்வர்

சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பதற்றம் தவிர்த்து விழிப்போடு செயல்படுவோம். பாதுகாப்பான மழைக்காலத்தை உறுதி செய்வோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக வருவாய்த்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் அடிப்படையில், அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 20 செ.மீ.க்கு மேலான மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம்.

இதில் பொதுமக்களின் உயிரும், உடைமைகளும் காக்கப்பட வேண்டும் என்பது தான் முதல் முக்கியத்துவம். அதை மனதில் வைத்தே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரத்யேக உதவி எண்

மழைக்காலத்தில் பொதுமக்களுக்கான பிரத்யேக உதவி எண்ணாக 1913 வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அறையில் மொத்தம் 150 நபர்கள் 4 சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் வழங்குவார்கள்.

அவசர உதவி எண் தவிர, சமூக ஊடகமான வாட்ஸ்ஆப், நம்ம சென்னை தளம் போன்றவற்றிலும் மழை பற்றிய தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படும்.

13 ஆயிரம் தன்னார்வலர்கள்

மேலும், அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு 13 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் வெளியேற்றுவதற்காக 100 குதிரைத் திறன் கொண்ட 100 எண்ணிக்கையிலான மோட்டார் பம்புகள் தாழ்வான பகுதிகளில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கக்கூடியவை என்று கண்டறிப்பட்டுள்ள 31 ரயில்வே கல்வெட்டுகள் ஆழமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

சென்னையின் மழைநீர் வடிகால் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

இதையும் படிக்க |கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை: பயணிகளுடன் வெள்ளத்தில் மூழ்கிய தனியார் பேருந்து

அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், அந்த நிவாரண மையங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு உறுதி செய்து நிறைவேற்றி தருவார்கள். இதுமட்டுமன்றி, தமிழ்நாடு அரசின் சார்பில் “TN ALERT” என்ற புதிய செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து மழைப்பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

ட்விட்டரில் புகார் தெரிவிக்கலாம்

பல்வேறு வானிலை மாதிரிகளைப் பயன்படுத்தி, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அனைத்துப் பகுதிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் உள்ள ஓரிரு இடங்களில், அவற்றை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பார்வைக்கு அப்படி ஏதாவது மூடப்படாமல் இருக்கும் கழிவுநீர் பாதைகள் பற்றி தகவல் தெரிந்தால், அதனை மாநகராட்சிக்கு ட்விட்டர் போன்ற தளங்களில் தெரிவிக்கலாம். அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் மின் துறை ஊழியர்கள்

தரையின் மேலே கிடக்கும் அனைத்து கேபிள்களையும் மூடுவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மின்சாரத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. தாழ்வான மின்மாற்றிகள் அதிக உயரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் மின்சாரத்துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் பாதிப்படையாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் அரசு தரப்பில் அலுவலர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெனரேட்டர்கள் வசதி

சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 356 நீரேற்று நிலையங்களும் ஜெனரேட்டர்கள் மூலம் இயங்கும் வகையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜெட்ராடிங், தூர்வாரும் இயந்திரங்கள், சூப்பர் சக்கர் உள்ளிட்ட 373 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பணிகளில் கூடுதலாக 83 கழிவுநீரகற்றும் வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

சென்னையின் மழைநீர் வடிகாலுக்கான முக்கிய நீர் வழித்தடங்களில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

விழிப்புணர்வு செய்திகளை வெளியிட வேண்டும்

இந்த மழைநேரத்தில் தமிழ்நாடு அரசு தருகின்ற வழிகாட்டுதல்களையும் முறையாகப் பின்பற்றி, பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், ஊடகவியலாளர்கள் பத்திரிகையாளர்கள், மக்களுக்கு பொறுப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் செய்திகளை வெளியிட வேண்டும். நாம் அனைவரும் கரம் கோர்த்து, இந்த மழைக்காலத்தில் நம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என துணை முதல்வர் கேட்டுக் கொண்டார்.

பதற்றம் தவிர்ப்போம்

இந்த நிலையில், பதற்றம் தவிர்த்து விழிப்போடு செயல்படுவோம். பாதுகாப்பான மழைக்காலத்தை உறுதி செய்வோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்க பதிவில், முதல்வரின் வழிகாட்டுதலின்படி, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர் ஆய்வு செய்து வருகிறோம். சென்னையின் மழைநீர் வடிகாலுக்கான முக்கிய நீர் வழித்தடமாக இருக்கின்ற அடையாறு ஆற்றின் முகத்துவாரம் அமைந்துள்ள பகுதியில் நடைபெறும் பணிகளை அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தோம்.

நீர்வளத்துறைச் சார்பில் ஆகாயத்தாமரையை அகற்றுதல், மணற்திட்டுகளை நிரந்தரமாக அப்புறப்படுத்துதல் என அடையாறு முகத்துவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளைக் கேட்டறிந்தோம்.

பதற்றம் தவிர்த்து விழிப்போடு செயல்படுவோம். பாதுகாப்பான மழைக்காலத்தை உறுதி செய்வோம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது