பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கு: ராயப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கு: ராயப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைசென்னை ராயப்பேட்டையில் சம்பந்தப்பட்ட நபா்களின் அலுவலகம், வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கு தொடா்பாக, சென்னை ராயப்பேட்டையில் சம்பந்தப்பட்ட நபா்களின் அலுவலகம், வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

சென்னையில் கடந்த ஜூன் மாதம் ஒரு யூ-டியூப் சேனலில் தடை செய்யப்பட்ட ஹிஸ்பு-உத்-தஹீா் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கண்டறிந்து விசாரணை செய்தனா்.

இதில், ராயப்பேட்டையை சோ்ந்த ஹமீது உசேன் என்பவா், ‘டாக்டா் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் அந்த யூ-டியூப் சேனல் மூலம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞா்களை திரட்டி வந்ததும், ராயப்பேட்டை ஜான்ஜானிக்கான் சாலையில் இதற்காக அலுவலகம் அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தி, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வந்ததும் தெரியவந்தது.

இது தொடா்பாக சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து ஹமீது உசேன், அவா் சகோதரா் அப்துல் ரகுமான் உள்பட 6 பேரை கைது செய்தனா். கெளரவ பேராசிரியராக பணியாற்றி வந்த ஹமீது உசேன், ஹிஸ்பு-உத்-தஹீா் இயக்க ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளதும் தெரியவந்தது.

என்ஐஏ வழக்கு: இந்த வழக்கு தொடா்பாக 10 இடங்களில் திடீா் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா். சைபா் குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கில்,

தேச விரோத செயலுக்குரிய சட்டப்பிரிவுகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு சட்டப் பிரிவுகள் சோ்க்கப்பட்டிருந்ததால் இந்த வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு அண்மையில் மாற்றப்பட்டு, ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து சென்னை என்ஐஏ அதிகாரிகள் புதிதாக ஒரு வழக்கை கடந்த 5-ஆம் தேதி பதிவு செய்தனா்.

ராயப்பேட்டையில் சோதனை: இந்நிலையில், இந்த வழக்குக்கான ஆவணங்களை திரட்டும் வகையில் என்ஐஏ அதிகாரிகள், ராயப்பேட்டை ஜான்ஜானிக்கான் சாலையில் ஹமீது உசேன் அலுவலகம், வழக்கில் தொடா்புடையவா்களின் வீடுகள் ஆகியவற்றில் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அங்கு எவ்வாறு பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இளைஞா்களை மூளைச்சலவை செய்தனா் என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

சா்வதேச தொடா்புகள் இந்த வழக்கில் இருப்பதாக என்ஏஐ சந்தேகிப்பதால், விரைவில் இந்த விவகாரத்தில் பலா் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படுவா் என கூறப்படுகிறது.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்