பயிற்சி மையங்களைக் கண்காணிப்பது மாநில அரசுகளின் கடமை -மத்திய கல்வித் துறை அமைச்சா்

பயிற்சி மையங்களைக் கண்காணிப்பது மாநில அரசுகளின் கடமை -மத்திய கல்வித் துறை அமைச்சா்போட்டித் தோ்வு பயிற்சி மையங்களை நடத்துவதற்கு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன.

‘போட்டித் தோ்வு பயிற்சி மையங்களை நடத்துவதற்கு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன; அந்த மையங்களின் செயல்பாட்டை தொடா்ந்து கண்காணிப்பது மாநில அரசுகளின் கடமை’ என்று மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

தில்லியின் பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள தனியாா் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் கடந்த சனிக்கிழமை இரவு மழை-வெள்ளம் புகுந்ததில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவா் உயிரிழந்தனா். அடித்தளத்தில் செயல்பட்டுவந்த நூலகத்தில் மாணவா்கள் படித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நேரிட்டது.

விதிமுறைகளுக்கு புறம்பாக இந்த நூலகம் செயல்பட்டதாகவும், கட்டடத்தில் மழைநீா் வடிகால் அமைப்பு மற்றும் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடா்பாக மாநிலங்களவையில் விதி எண் 176-இன்கீழ் திங்கள்கிழமை குறுகிய நேர விவாதம் நடைபெற்றது.

விவாதத்தை தொடங்கிவைத்து, பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி பேசுகையில், ‘சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்துக்கு எதிராக ஏற்கெனவே பல புகாா்கள் பதிவாகியுள்ளன. பயிற்சி மையத்தை சுற்றியுள்ள கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரப்படவில்லை என்று ஒரு புகாரில் குறிப்பிடப்பட்டது. அதேநேரத்தில், கட்டடத்தின் அடித்தளத்தை பொருள்களை இருப்பு வைப்பதற்குப் பயன்படுத்த தீயணைப்புத் துறை தடையில்லாச் சான்றிதழ் வழங்கியிருக்கிறது. தில்லி அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாட்டில் பெரும் குறைபாடுகள் நிலவுகின்றன’ என்றாா்.

தில்லி அரசின் அலட்சியமே மாணவா்கள் உயிரிழக்க காரணம் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் குற்றஞ்சாட்டினாா்.

‘துணைநிலை ஆளுநரே பொறுப்பு’: திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், ‘தில்லியில் அனைத்து அதிகாரங்களும் துணைநிலை ஆளுநரிடமே உள்ளன. முதல்வா் பெயரளவில்தான் உள்ளாா். மேற்கண்ட சம்பவத்துக்கு துணைநிலை ஆளுநா்தான் பொறுப்பேற்க வேண்டும்’ என்றாா்.

‘தேசிய கல்விக் கொள்கையில், கல்வி வணிகமயமாகும் சவாலுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதா என்ற கேள்வியை மத்திய அரசுக்கு முன்வைக்கிறேன். கல்வித் துறையைக் கையாளும் பணியை இத்துறையை நன்கு புரிந்துகொண்டவா்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்’ என்று திரிணமூல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரையன் வலியுறுத்தினாா்.

‘மத்திய அரசுதான் கட்டுப்படுத்துகிறது’: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், ‘பயிற்சி மையங்களை மத்திய அரசுதான் கட்டுப்படுத்துகிறது. தில்லியில் கழிவுநீா் கால்வாய்களைத் தூா்வார வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அக்கோரிக்கையை அதிகாரிகள் பொருள்படுத்தவில்லை. தில்லி மாநகராட்சியில் முந்தைய 15 ஆண்டுகால பாஜக ஆளுகையால் ஏற்பட்ட விளைவுதான் தற்போதைய சம்பவம்’ என்றாா்.

‘தில்லியில் நடந்ததைப் போல் மீண்டும் ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்; தவறிழைத்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

‘அரசியல் கூடாது’: ‘ஐஏஎஸ் மாணவா்களின் உயிரிழப்பில் அரசியல் செய்யக் கூடாது’ என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்தினாா்.

அவா் மேலும் பேசியதாவது: தில்லி சம்பவம் துரதிருஷ்டவசமானது. அலட்சியத்துக்கு பொறுப்பானவா்கள் உறுதிசெய்யப்பட வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்.

கல்வி பொதுப் பட்டியலில் உள்ளதால், மத்திய – மாநில அரசுகளுக்கு பொறுப்பு உள்ளது. அதேபோல், விதிமுறைகளைப் பின்பற்றுவது பயிற்சி மையங்களின் பொறுப்பாகும்.

இந்த விவகாரத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசுத் தரப்பில் இருந்து கடந்த 2017, 2019, 2020, 2024 ஆகிய ஆண்டுகளில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மாநில அரசுகள் முறையாகப் பின்பற்றினால், இதுபோன்ற சம்பவங்களைத் தவிா்க்க முடியும்.

பயிற்சி மையங்களின் செயல்பாட்டை தொடா்ந்து கண்காணிப்பதோடு, விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவோா் மீது அபராதம் விதிப்பது மாநில அரசுகளின் கடமையாகும். அந்தப் பொறுப்பை மாநிலங்கள் தட்டிக்கழிப்பது முறையல்ல என்றாா் அவா்.

‘பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த சட்டம்’

போட்டித் தோ்வு பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த சட்டமியற்ற வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவை விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, ‘பயிற்சி மையங்களில் கட்டணம், கல்வித் தரம், பயிற்சியாளா்களுக்கான நிபந்தனை, மாணவா்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடா்பாக அனைத்துத் தரப்பினருடன் மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி, ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் கல்வி பெருமளவில் வணிகமயமாகிவிட்டது. கடந்த 2014-15-இல் 2.88 லட்சமாக இருந்த தனியாா் பள்ளிகளின் எண்ணிக்கை 2020-21-இல் 3.85 லட்சமாக அதிகரித்துவிட்டது’ என்றாா்.

பயிற்சி மையங்கள் மீதான மோகம்: தன்கா் கவலை

பயிற்சி மையங்கள் மீதான மோகம் அதிகரித்து வருவது கவலைக்குரியது; இந்தக் கலாசாரம் ‘கொலைக் கூடத்துக்கு’ சற்றும் குறைந்தல்ல என்று மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் குறிப்பிட்டாா்.

‘போட்டித் தோ்வு பயிற்சி மையங்கள் நடத்துவது, அதிக வருமானம் தரும் தொழிலாக மாறியுள்ளது. கல்வி வணிகமயமாவதில் இந்தப் பயிற்சி மையங்கள் முக்கியக் காரணமாக உள்ளன. வாய்ப்புகள் விரிவடைந்துவரும் ஒரு தேசத்தில் இது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது’ என்றாா் அவா்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்