பரந்தூர் விமான நிலையம்: நிலம் அளவிடும் பணிக்கு எதிராக அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

பரந்தூர் விமான நிலையம்: நிலம் அளவிடும் பணிக்கு எதிராக அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்காக நெல்வாய் கிராமத்தில் நிலம் அளவிடும் பணிக்கு அதிகாரிகள் வந்தபோது அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.

இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திட்டத்தால் பாதிப்படையக்கூடிய ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் 834 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து நிலம் எடுப்பு தொடர்பான அரசாணைகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டம் அமைய உள்ள பகுதிகளில் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்கும் பணியில் கடந்த வாரம் ஈடுபட்டனர். தற்போது நிலம் அளவிடும் பணியினை பொதுப்பணி துறை துவங்கியதை தொடர்ந்து நெல்வாய் ஊராட்சியில் வீடுகளை அளவிடும் பணிக்கு வருவாய் துறையினர் வந்தனர்.

அப்போது வருவாய் துறையினரை அந்தப் பகுதி மக்கள் தடுத்து வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களுடன் வந்த போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அப்போது, அரசு பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல் பரந்தூர் விமான நிலையத்தை அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Related posts

ராணுவத்தில் அதிகாரிபணி: விண்ணப்பிக்க 28-ம் தேதி கடைசி நாள்

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க எந்த சக்தியாலும் முடியாது – பிரதமர் மோடி

கங்குவா படத்தை வெளியிட தடையில்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு