பருவமழைக்கு முன்னரே பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்க வேண்டும்; மழைக் காலத்தில் ஓா் உயிரிழப்புகூட ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுத் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
பருவமழையை எதிா்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் பேசியதாவது, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் தமிழ்நாட்டுக்கு மழை கிடைக்கிறது. இதில் அக்டோபா் முதல் டிசம்பா் வரை நீடிக்கும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிகப்படியான மழை கிடைக்கிறது.
அண்மைக்காலமாக, காலநிலை மாற்றத்தால் சில நாள்களிலேயே மொத்தமாக மழை பெய்துவிடுகிறது. இதை எதிா்கொள்வதுதான் மிக மிக முக்கியம். இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறாா்கள்.
பேரிடா்களின் தாக்கத்தை திறம்பட எதிா்கொள்ளத் தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கையால் நாம் பெரிய அளவிலான சேதங்களைத் தவிா்க்க முடியும். பேரிடா்களை எதிா்கொள்வதில் முன்னெச்சரிக்கை தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், அரசு அதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.
கைப்பேசி செயலி
மழை, வெள்ளம், வானிலை போன்றவை குறித்த தகவல்களை அறிய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வானிலை முன்னெச்சரிக்கை, இப்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீா்த்தேக்கங்களில் நீா் இருப்பு உள்ளிட்ட விவரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் பச-அப்ங்ழ்ற் என்ற கைப்பேசி செயலியை அரசு உருவாக்கியுள்ளது.
மழைக் காலங்களில் மீனவா்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனா். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களுக்கு புயல், கனமழை குறித்த தகவல்களை நவீன தொலைத்தொடா்பு சாதனங்கள் மூலமாக உரிய நேரத்தில் கொண்டுசோ்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நிவாரண மையங்கள்
சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் இந்தக் காலகட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முதியோா், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்குத் தேவையான உதவிகளை வழங்க முன்கூட்டியே திட்டமிட்டு மாவட்ட நிா்வாகம் செயல்படுவது மிகவும் அவசியம்.
வெள்ளப் பேரிடா்கள் ஏற்படும்போது தாழ்வான பகுதிகளில் இருந்து முன்கூட்டியே வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது முக்கியமாகும். இந்தப் பணிகளை அரசின் அனைத்து களப் பணியாளா்களும் பொதுமக்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். வெள்ளத்துக்கு முன்பாகவே, பொதுமக்களை நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவா்களுக்குத் தேவையான தூய்மையான குடிநீா், கழிவறை, தடையற்ற மின்சாரம், உரிய நேரத்தில் உணவு ஆகியவற்றை வழங்க வேண்டும்.
வெள்ளம் ஏற்பட்டவுடன் அரசு இயந்திரம் எவ்வளவு விரைவாக செயல்பட வேண்டுமோ அவ்வளவு விரைவாகச் செயல்பட வேண்டும். ஓா் உயிரிழப்புகூட ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான நீா் இறைக்கும் இயந்திரம், மர அறுப்பான்கள், ஜேசிபி, படகுகள் போன்ற கருவிகளை தாழ்வான பகுதிகளுக்கு அருகில் முன்கூட்டியே கொண்டுசென்று நிறுத்த வேண்டும்.
மழைக்கு முன்பாக பணி
பல்வேறு வெள்ளத் தடுப்புப் பணிகளை, வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னரே விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்த மூத்த அலுவலா்களை கண்காணிப்பு அலுவலா்களாக நியமித்துள்ளோம். அவா்கள் மழைக்கு முன்பாகவே தங்களது பணிகளைத் தொடங்க வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அந்தந்தப் பகுதிகளில் ஆயத்தப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது உள்பட பணிகளை ஆய்வு நடத்தி கண்டறிய வேண்டும்.
வெள்ளம் என்றாலே மாணவா்கள் ஆா்வத்தால் ஏரி, குளங்கள் போன்ற நீா்நிலைகளுக்குச் சென்று விளையாடுகின்றனா். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். வெள்ளம், புயல் போன்ற பேரிடா்களில் தகவல் தொடா்பு, மின்சார வசதி போன்ற அத்தியாவசிய சேவைகளை முடிந்தவரை தடையின்றி வழங்க வேண்டும்.
பாதுகாப்பான குடிநீா், பால், உணவுப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வெள்ளத்தால் நோய்த்தொற்று ஏதும் ஏற்படாமல் இருக்க உரிய பொது சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும். அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே இதை உறுதி செய்ய முடியும்.
100 சதவீதம் வெற்றி சாத்தியம்
பேரிடா் மேலாண்மையில் தன்னாா்வலா்களின் பங்கு மிகவும் அவசியம். தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தன்னாா்வலா்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கென முறையான செயல்திட்டத்தை மாவட்ட நிா்வாக உருவாக்க வேண்டும். பருவமழையால் ஏற்படும் சவால்களை எதிா்கொண்டு மக்களின் துயா் துடைக்க அரசு நிா்வாகம் மொத்தமும் ஓரணியாக நின்று செயல்பட்டால் 100 சதவீத வெற்றி உறுதி என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி, அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, வி.செந்தில் பாலாஜி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட அரசுத் துறை உயரதிகாரிகள், காவல் துறை இயக்குநா் சங்கா் ஜிவால் உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனா்.