பழநியில் தேவஸ்தான அதிகாரிகள் – கடை உரிமையாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்

பழநியில் தேவஸ்தான அதிகாரிகள் – கடை உரிமையாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்

பழநி: பழநி முருகன் கோயில் படிப்பாதையில் கடைகளை காலி செய்வதில் தேவஸ்தான அதிகாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, வசந்த் என்ற இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 3 கி.மீ. தூரம் கிரிவலப்பாதை உள்ளது. இந்த கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கிரிவலப்பாதையில் சுற்றி தடுப்புகள் அமைத்து வணிக நோக்கிலான கடைகள் ஏற்படாமல் தடுக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த மாதம் 152 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. கிரிவலப்பாதையில் வணிக நோக்கிலான கடைகள் ஏற்படாமல் தடுக்க தனியார் கடைகளுக்கு முன் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து, பழநி தேவஸ்தானத்துக்கு சொந்தமான குடமுழுக்கு நினைவரங்கம் பகுதியில் 36 கடைகள், தண்டபாணி நிலைய வளாக கடைகள் 11, மங்கம்மாள் மண்டப கடைகள் 7 உட்பட மொத்தம் 74 கடைகளை காலி செய்யுமாறு தேவஸ்தானம் நோட்டீஸ் வழங்கியது.

இதை எதிர்த்து, 2015-ல் வியாபாரிகள் தயாரிப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான கடைகளை ஜூலை 31-க்குள் காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (ஆக.1) தேவஸ்தானம் சார்பில், பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்ததால் நேற்று (ஜூலை 31) வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை காலி செய்தனர்.

இந்நிலையில், இன்று ( வியாழக்கிழமை) தேவஸ்தானம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது, பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் படிப்பாதையில் பால்காவடி மடத்தில் இருந்த கடைகளை அகற்ற தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், “எங்களது பட்டா நிலத்தில் இருக்கும் கடைகளை அகற்ற முடியாது. கடைகளை அகற்றுவது தொடர்பாக, தேவஸ்தானம் சார்பில் நோட்டீஸ் வழங்கவில்லை” எனக் கூறி அங்கிருந்த வியாபாரிகள் கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கடை உரிமையாளர் பழனிக்குமார் என்பவரது மகன் வசந்த் (25) என்பவர்உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, கடை உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வட்டாட்சியர் சக்திவேலன் முன்னிலையில் 4 கடைகளையும் பூட்டி வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்தச் சம்பவத்தால் பழநி அடிவாரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்