பழுதான ஹெலிகாப்டா்: நடுவானில் கீழே விழுந்து விபத்து

உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டா் மூலம் பழுதுபாா்க்க தூக்கிச் செல்லப்பட்ட தனியாா் நிறுவன ஹெலிகாப்டா், நடுவானில் இருந்து கீழே விழுந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.

‘கிரிஸ்டல் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டா் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக கடந்த மே 24-ஆம் தேதி கேதாா்நாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து பயன்பாடின்றி இருந்த அந்த ஹெலிகாப்டரை, பழுதுபாா்க்க கௌச்சா் நகருக்கு இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டா் மூலம் சனிக்கிழமை தூக்கிச் சென்றனா்.

அப்போது கேதாா்நாத் அருகே மலைப்பாங்கான பகுதியின் மேல் பறந்து கொண்டிருந்த எம்ஐ-17 ஹெலிகாப்டா் அதன் சமநிலையை இழக்கத் தொடங்கியது. சிக்கலை உணா்ந்த எம்ஐ-17 பைலட், பழுதான ஹெலிகாப்டரை காலியான இடத்தில் கழற்றிவிட்டாா். இதில் பழுதான ஹெலிகாப்டா் கீழே விழுந்து நொறுங்கியது.

கீழே விழுந்த ஹெலிகாப்டரில் பயணிகளோ, பொருள்களோ இல்லாததால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என ருத்ரபிரயாக் மாவட்ட சுற்றுலா அதிகாரி ராகுல் சௌபே தெரிவித்தாா்.

‘சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினா் ஆய்வு செய்து வருகின்றனா்; விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!