பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பஞ்சாபி மொழியில் பேச அனுமதி

பிராந்திய மொழிகள் பேசும் உறுப்பினர்களுக்காக சட்டசபை விதிகளில் செய்யப்பட்டுள்ள இந்த திருத்தம் மாகாணத்தின் பன்மொழி தன்மையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் இனி ஆங்கிலம், உருது தவிர பஞ்சாபி உள்ளிட்ட குறைந்தது 4 பிராந்திய மொழிகளில் பேசலாம்.

சட்டசபையில் பயன்படுத்த அனுமதிக்கப்படும் பிராந்திய மொழிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்திற்கு, சபாநாயகர் மாலிக் முஹம்மது அகமது கான் தலைமையிலான சட்டசபை சிறப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளுடன் பஞ்சாபி, சராய்கி, போட்டோஹாரி மற்றும் மேவதி ஆகிய மொழிகளில் எம்.எல்.ஏ.க்கள் உரையாற்றலாம் என தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு, உறுப்பினர் யாராவது ஆங்கிலம் மற்றும் உருது தவிர வேறு மொழியை பயன்படுத்துவதற்கு சபாநாயகரின் அனுமதி தேவை. ஆனால், அதுபற்றி கோரிக்கை வைத்தாலும் எப்போதும் அனுமதி வழங்கப்படுவதில்லை. எனவே, பிராந்திய மொழிகள் பேசும் உறுப்பினர்களுக்காக சட்டசபை விதிகளில் செய்யப்பட்டுள்ள இந்த திருத்தம் மாகாணத்தின் பன்மொழி தன்மையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. மேலும், சட்டமன்ற விவாதங்களில் திறம்பட தொடர்புகொள்ளவும், முழுமையாக பங்கேற்கவும் உதவுகிறது.

இதுபற்றி சபாநாயகர் பேசுகையில், அரசின் அதிகாரபூர்வ நடவடிக்கைகளில் பிராந்திய மொழிகளை இணைப்பது, கலாச்சார மரியாதை மற்றும் மொழியியல் பாரம்பரியத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதை காட்டுகிறது என்றும், இதன் மூலம் சட்டசபைக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு வலுப்படுவதாகவும் கூறினார்.

சராய்கி, போட்டோஹாரி மற்றும் மேவதி ஆகிய மொழிகள் பஞ்சாபியின் வட்டார மொழிகளா அல்லது தனி மொழிகளா என்பது குறித்து சர்ச்சை உள்ளது. இந்த மொழிகளை பேசுவோர், அவை தனி மொழிகள் என்று கருதுகின்றனர். ஆனால் அவை வட்டார மொழிகள் என பஞ்சாபி மொழி பேசுவோர் கூறுகிறார்கள்.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்