பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாமிலிருந்து சுகாதாரப் பணியாளா்களை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றனா். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு காவலதுறை அதிகாரிகள் உயிரிழந்தனா்.
இந்த ஆண்டு மட்டும் அங்கு போலியோ உறுதி செய்யப்பட்ட சிறுவா்களின் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.
இந்த நிலையில், பதற்றம் நிறைந்த கைபா் பக்துன்கவா மாகாணத்தில் போலியோ தடுப்பு முகாம்கள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினா். ஔரக்ஸாய் பழங்குடியின மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனா்; இதில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.
அதே மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில், போலியோ தடுப்பு முகாமில் இருந்த சுகாதாரப் பணியாளா்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக சிறைபிடித்துச் சென்றனா். அத்துடன், அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த படையினரிடம் இருந்து ஆயுதங்களையும் அவா்கள் பறித்துச் சென்றனா்.
இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த நாட்டின் பயங்கரவாத அமைப்புகள் போலியோ தடுப்பு பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்திவருகின்றன.
இதன் காரணமாக, உலகின் மற்ற பகுதிகளில் போலியோ நிரந்தரமாக ஒழிக்கப்பட்டாலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் அந்த கொடிய நோய் இன்னும் பரவிவருகிறது.