பாகிஸ்தான்: 5 பேர் கொடூர கொலை; மின்கம்பத்தில் கட்டி வைத்த நிலையில் உடல்கள் மீட்பு

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட 5 பேரும் ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்களாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

குவெட்டா,

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சாகி நகர பகுதியில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளை ஒட்டிய எல்லை பகுதியில் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் 5 உடல்கள் இருந்துள்ளன.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த உடல்களை மீட்டு சாகி நகரில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இவர்கள் 5 பேரும் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்களாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழு ஒன்று அவர்களை கடத்தி சென்றிருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்த குழு, ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு பதற்றம் ஏற்படுத்தி வரும் செயல்களில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வருகிறது.

இதேபோன்று குவெட்டா நகரில் உள்ள ஷாபான் பகுதியில் இருந்து மற்றொரு உடல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இதுதவிர, 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை.

இந்த படுகொலைகளுக்கான உள்நோக்கம் என்னவென்று தெரிய வரவில்லை. அதனை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Related posts

முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை: இலங்கை புதிய அரசு உத்தரவு

லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் – ஈரான்

ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல்