பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பை அழிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : ஜப்பான் விமான நிலையத்தில் வெடித்த 2-ம் உலகப் போர் குண்டு!
வெறுப்பை பரப்பும் பாஜக
நுஹ் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
“கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப்பயணத்தின் போது, பாஜக எங்கெல்லாம் வெறுப்பை விதைத்திருந்ததோ, அங்கெல்லாம் அன்பை விதைத்தோம். நாங்கள் அன்பு மற்றும் ஒற்றுமையை முன்னெடுக்கிறோம். ஆனால், அவர்கள் நாட்டை பிளவுப்படுத்தி வெறுப்பை விதைக்கிறார்கள்.
பாஜகவும் ஆர்எஸ்எஸும் அரசியலமைப்பை அழித்து வருகின்றது. நாங்கள் சித்தாந்த ரீதியிலான போரை முன்னெடுத்துள்ளோம். அரசியலமைப்பை அழிப்பவர்கள் ஒருபுறமும், பாதுகாக்க நினைப்பவர்கள் மறுபுறமும் உள்ளனர்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பை அழிக்க வேண்டும். அன்புக்கும் வெறுப்புக்கும் இடையேயான போட்டி இது. ஹரியாணா தேர்தலில் போட்டியிடும் சிறுசிறு கட்சிகள் எல்லாம் பாஜகவின் பி அணிகள். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸுக்கு வாக்களிங்கள்” என்றார்.
வேலையின்மை
மேலும் பேசிய ராகுல் காந்தி, “நான் அமெரிக்காவுக்கு சென்றபோது ஹரியாணாவைச் சேர்ந்த இளைஞர்களை சந்தித்துப் பேசினேன். ஹரியாணாவில் வேலை கிடைக்காததால்தான் வெளிநாட்டுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ஹரியாணாவில் பணவீக்கமும், வேலையின்மையும் உள்ளதாக தெரிவித்தனர். ரூ. 50 லட்சம் கடன் ஏற்பட்டதால் அமெரிக்காவுக்கு வந்ததாக தெரிவித்தனர். வேலையின்மை பட்டியலில் ஹரியாணா முதலில் இடத்துக்கு வந்தது குறித்து மோடியின் உரையில் விவரிக்கவில்லை. கோடீஸ்வரர்களுக்கான அரசை மோடி நடத்தி வருகிறார்.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக சனிக்கிழமை நடைபெறவுள்ளது. வாக்கெண்ணிக்கை அக். 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.