பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 4.20 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி:

டெல்லியில் நடைபெறும் இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் வீடியோ செய்தி வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது:-

பருவநிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம், புதிய தொழில்நுட்பங்கள், உலகமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் ஆகிய காரணங்களால் நமது உணவு முறைகளுக்கான சவால்கள் அதிகரித்துள்ளன. பாதுகாப்பற்ற உணவுகளால் ஆண்டுதோறும் 60 கோடி மக்கள் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். 4.20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பாதுகாப்பற்ற உணவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் 70 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.

உலக அளவில் உள்ள இந்த சவால்களை எதிர்கொள்வதில் உணவு கட்டுப்பாட்டு சமூகம் முக்கிய பங்கு வகிக்கிறது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சத்தான உணவை வாங்கி சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர். எனவே, இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம். அனைவருக்கும் பாதுகாப்பான உணவு மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டு நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, உணவுத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

US To Test Hypersonic Nuclear Missile After Polls Close: Report

2024 Maruti Suzuki Dzire Officially Revealed, Launch On November 11