பாபா சித்திக் கொலை: மருத்துவமனையில் குவிந்த பிரபலங்கள்! போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல்

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை பார்க்க மருத்துவமனையில் பிரபலங்கள் குவிந்து வருகின்றனர்.

மூன்று முறை எம்எல்ஏவான இவா், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்மையில் தேசியவாத காங்கிரஸில் இணைந்தாா்.

நிா்மல் நகா் பகுதியில் தனது மகனும், பாந்தரா கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஜீஷான் வீட்டிற்கு வெளியே வந்தபோது சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில், அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் அவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

கொலை செய்யப்பட்ட இடம்

மருத்துவமனையில் குவிந்த பிரபலங்கள்

உடனடியாக அருகில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு பாபா சித்திக் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த தகவல்கள் வெளியானவுடன், மருத்துவமனையில் அரசியல் தலைவர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் குவியத் தொடங்கியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுட்டுக் கொலை

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜீத் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் நள்ளிரவில் மருத்துவமனைக்கு சென்றனர்.

மேலும், பாபா சித்திக்கிற்கு நெருங்கிய நண்பர்களான சல்மான் கான், சஞ்சய் தத், ஷில்பா செட்டி, ஜாஹீர் இக்பால் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் மருத்துவமனைக்கு நள்ளிரவில் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல்கள்

1. பாபா சித்திக்கை சுட்ட மூன்று பேரில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது போலீஸ் கைது செய்துள்ளனர். மூன்றாவது நபரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றன.

2. பாபா சித்திக்கை சுட்ட 9.9 மி.மி. கைத் துப்பாக்கியை போலீஸ் கைப்பற்றியுள்ளது. அவர் சுடப்பட்ட இடத்தில் இருந்து 6 புல்லட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

3. கடந்த 15 நாள்களுக்கு முன்பு பாபா சித்திக்கிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

4. பிரபல ரெளடி லாரன்ஸ் பிஸ்னொய்க்கு இந்த கொலை வழக்கில் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சல்மான் கானுக்கும் லாரன்ஸ் பிஸ்னொய் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!