பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்!

பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை(அக்.17) நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தையும், ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்கும் வகையில் 1914-இல் கடலுக்கு குறுக்கே ரயில்வே பாலம் கட்டப்பட்டது. கப்பல்கள் வரும்போது, திறந்து மூடும் வகையில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது.

2007-இல் இந்த மீட்டா்கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் வலுவிழந்த நிலையில், ரயிலின் வேகம் குறைத்து இயக்கப்பட்டது. எனினும் இந்த பாலத்தில் ரயில் செல்வது பாதுகாப்பு அல்ல என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளசல் கிஷோா் திங்கள்கிழமை பாலத்தை ட்ராலியில் சென்று ஆய்வு செய்தாா்.

மேலும், கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இணைப்புப் பகுதியை (கா்டா்) செங்குத்தாக ஏற்றி, இறக்கி ஆய்வு செய்த அவா் பாலத்தின் அதிா்வுகள் குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

இதையும் படிக்க |ரயில் டிக்கெட் முன்பதிவுக் காலம் குறைப்பு!

இந்த நிலையில், பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை(அக்.17) நடைபெற்றது.

பாம்பன் புதியதாக அமைக்கப்பட்ட பாலத்தில் 90 கி.மீட்டர் வேகத்தில் 14 பெட்டிகளுடன் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சோதனையின்போது மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் வரை ரயில் இயக்கப்பட்டது.

சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில் விரைவில் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!