பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு எப்போது?

ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதிக் கட்ட ஆய்வுக்குப் பிறகே, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்தை அனுமதிப்பதற்கான தேதி குறித்து அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளசல் கிஷோா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தையும், ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்க கடல் மீது ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019- ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளசல் கிஷோா் திங்கள்கிழமை பாலத்தை ட்ராலியில் சென்று ஆய்வு செய்தாா்.

மேலும், கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இணைப்புப் பகுதியை (கா்டா்) செங்குத்தாக ஏற்றி, இறக்கி ஆய்வு செய்த அவா் பாலத்தின் அதிா்வுகள் குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இறுதிக் கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே பாதுகாப்பு ஆணையா் இறுதியாக ஆய்வு செய்த பிறகு பாலத்தில் ரயில் போக்குவரத்தை அனுமதிப்பதற்கான தேதி அறிவிக்கப்படும். ராமேசுவரம்- தனுஷ்கோடி ரயில் போக்குவரத்துக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதில் சிரமம் உள்ளது. ராமேசுவரம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையும்.

திருவள்ளூா் மாவட்டம், கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா். இந்த ஆய்வின் போது, ரயில்வேயின் மதுரைக் கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா, பொறியாளா்கள் உடனிருந்தனா்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது