பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய 100 கிலோ எடை கொண்ட யானை திருக்கை மீன்!

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய 100 கிலோ எடை கொண்ட யானை திருக்கை மீன்!

ராமேசுவரம்: ராமேசுவரத்துக்கு அருகில் உள்ள பாம்பனில் நாட்டுப்படகு மீனவர் வலையில் சுமார் நூறு கிலோ எடை கொண்ட ராட்சத யானைத் திருக்கை மீன் இன்று (செப்.3) சிக்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து நேற்று 80க்கும் மேற்பட்ட படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு மீனவரின் வலையில் ராட்சத யானைத் திருக்கை மீன் ஒன்று சிக்கியது. அதை இன்று காலை கரைக்கு கொண்டு வந்தனர். பாம்பன் பாலத்திற்கு சுற்றுலா வந்தவர்கள் அந்த மீனை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள், “ராமேசுவரம் கடற்பகுதியில் யானைத் திருக்கை, முள்ளந்திருக்கை, குருவித் திருக்கை, சோனகத்திருக்கை, ஆடாத் திருக்கை, புலியன் திருக்கை, கருவா திருக்கை, பூவாத்திருக்கை, மணற் திருக்கை, வவ்வால் திருக்கை உள்ளிட்ட திருக்கை வகை மீன்கள் உள்ளன.

யானைத் திருக்கையின் உருவம் பெரியதாகவும், தோல் யானைப் போன்று இறுக்கமாகவும் இருப்பதால் இதற்கு யானைத் திருக்கை என்று பெயர் உண்டானது. இந்த திருக்கை 50 கிலோவிலிருந்து 5 ஆயிரம் கிலோ எடை வரையிலும் வளரக் கூடியது. பாம்பனில் பிடிபட்ட இந்த யானை திருக்கை மீன் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது” என்றனர்.

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்