பார்டர்-கவாஸ்கர் தொடர்; இந்திய அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் – ஆஸ்திரேலிய வீரர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எனக்கு இங்கிலாந்தில் விளையாடும் போது நல்ல பார்ம் இருந்தது. அதனை தொடர்ந்து தற்போதும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறேன்.

எனக்கு தற்போதைய பேட்டிங் பார்ம் திருப்தியாக இருப்பதால் இந்திய அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறேன். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பொறுத்தவரை அங்கு நான் மகிழ்ச்சியுடன் விளையாட இருக்கிறேன். தற்போதைய இந்திய அணி உலகின் எந்த ஒரு கண்டிஷனிலும் சிறப்பாக விளையாடக்கூடிய அணியாக இருந்து வருகிறது.

எனவே பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று காத்திருக்கிறேன். நிச்சயம் இந்திய அணி இங்கு வரும்போது அவர்களுக்கு எதிராக என்னுடைய பலத்தை காண்பிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; அணியில் ஷமி இடம் பெறாதது ஏன்..? – வெளியான தகவல்

ஹாங் காங் சிக்சஸ் தொடர்; உத்தப்பா தலைமையில் களம் இறங்கும் இந்தியா

மீண்டும் தோல்வி கண்டது வருத்தமளிக்கிறது – பாகிஸ்தான் கேப்டன்