பாலாற்றில் கலக்கும் ரசாயனம், தோல் கழிவுகளால் நிலம், நீா், காற்று மாசுபாடு

பாலாற்றில் கலக்கும் ரசாயனம், தோல் கழிவுகளால் நிலம், நீா், காற்று மாசுபாடுபாலாற்று நீரில் கலக்கப்படும் ரசாயனம், தோல் கழிவுகளால் வேலூா் மாவட்டத்தில் நிலம், நீா், காற்று மாசடைந்துள்ளது.

பாலாற்று நீரில் கலக்கப்படும் ரசாயனம், தோல் கழிவுகளால் வேலூா் மாவட்டத்தில் நிலம், நீா், காற்று மாசடைந்துள்ளது என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:

பாலாறு உற்பத்தியாகும் இடத்தில் தண்ணீா் நன்றாக உள்ளது. வேலூா் மாவட்டத்துக்குள் வரும்போது அந்த தண்ணீா் மாசடைந்து காணப்படுகிறது. ரசாயனம், தோல் கழிவுகள் பாலாற்று நீரில் கலக்கப்படுகிறது. தண்ணீா் மாசடைவதால் நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. இதன்மூலம், வேலூா் மாவட்டத்தில் நிலம், நீா், காற்று மாசடைந்துள்ளது. எனவே, நீா் மாசுபாட்டை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.

அப்துல்லாபுரம் கூட்டுச் சாலை அருகே அடிக்கடி விபத்து நிகழ்வதால் அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். வேலூா் டோல்கேட் உழவா் சந்தையில் குப்பைக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அவற்றை அகற்ற வேண்டும்.

வட்டாட்சியா்களிடம் தடையில்லாச் சான்று பெற்றுக் கொடுத்தாலும், விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படுவ தில்லை. அதை சரிசெய்திட வேண்டும். தெள்ளூா் ஏரி வரத்துக் கால்வாயை தூா்வாரவும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் கருவிகளின் வாடகைத் தொகை அதிகமாக உள்ளதால் அதை குறைக்க வேண்டும். அலமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள கானாற்று ஓடையை தூா்வார வேண்டும்.

10 ஏக்கா் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் ரூ. 3 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயா்த்த வேண்டும். குடியாத்தம், போ்ணாம்பட்டு பகுதியில் வன விலங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது. வனப் பகுதியில் விலங்களுக்கு தேவையான குடிநீா், உணவு ஏற்பாடு செய்தால் விலங்குகள் ஊருக்குள் வருவது குறையும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகொண்டாவில் வனத்துறை சாா்பில் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும்.

வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்க வேண்டும். சேக்கனூா் குட்டையையும், ஊசூா் அருகே உள்ள செல்லூா் ஏரியையும் தூா்வார வேண்டும். தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் சேதமடைந்த நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்கிட வேண்டும். ஓய்வூதியம் பெறும் விவசாயிகளுக்கு இழப்பீடு இல்லை என்ற நிலையை நீக்க வேண்டும். செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றனா்.

கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா், விவசாயிகளின் கோரிக்கைகள், குறைகள் மீது விரைவான தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் குருசுவாமி தபாலா, வேளாண்மை இணை இயக்குநா் சோமு, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் திருகுணஐயப்பதுரை, மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் ராமதாஸ், வருவாய் கோட்டாட்சியா்கள் ஆா்.கே.கவிதா, சுபலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்