அல்ஜீரியா குத்துச்சண்டை வீராங்கனை இமேன் கெலிஃப் மீதான பாலினம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அவர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் அல்ஜீரியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான இமேன் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் சீனாவின் யாங் லியூவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து இமேன் கெலிஃப் வெற்றி பெற்றார்.
இமேன் கெலிஃப் கடந்தாண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் குரோமோசோம் சோதனையில் தோல்வியடைந்தார். ஆனால் ஒலிம்பிக் நிர்வாகம் அவர் சரியான பாலின தகுதி பெற்றுள்ளதாக இந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதி அளித்தது.
ஆனால், தொடர்ந்து அவரின் பாலினம் குறித்த சர்ச்சைகள் எழுந்துவந்தன.
இந்த நிலையில், இமேன் கெலிஃப் உடலில் டெஸ்டிக்கல்ஸ் (விரைகள்) மற்றும் எக்ஸ்ஒய் க்ரோமோசோம்கள் இருப்பதாகவும், 5-ஆல்ஃபா ரெடக்டேஸ் குறைபாடு எனப்படும் ஆண்களிடையே காணப்படும் பாலியல் வளர்ச்சிக் குறைபாடு அவரது உடலில் காணப்படுவதாகவும் பிரெஞ்சு பத்திரிகையாளர் ஜஃபார் ஏட் ஆடியா மருத்துவ அறிக்கை ஒன்றை சில நாள்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.
இதனால், இமேன் கெலிஃப் பெண்ணல்ல, ஆண் எனக்கூறி அவரது பாலினம் தொடர்பாக அனைத்து தரப்பிலும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இதையும் படிக்க | ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இமேன் கெலிஃப் பெண்ணல்ல, ஆண்! மருத்துவ அறிக்கை!
இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தற்போது கருத்து தெரிவித்துள்ளது. அதில், “பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது தனது பாலினம் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த நபர்களுக்கு எதிராக இமேன் கெலிஃப் சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதை அறிகிறோம். மேலும், சமீபத்திய மருத்துவ அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் வழக்குத் தொடர்வதற்கு அவர் தயாராகி வருகிறார்.
சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், ஆதாரமற்ற சரிபார்க்கப்படாத மருத்துவ அறிக்கைகள் ஊடகங்களில் வெளிவருவதாலும் இதுகுறித்து ஒலிம்பிக் கவுன்சில் கருத்து தெரிவிக்காது.
இமேன் கெலிஃப் குத்துச்சண்டைப் போட்டியில் பெண்கள் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் (2021) மற்றும் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் உள்பட பல ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இமேன் கெலிஃப் தற்போது சந்திக்கும் அவமானங்கள் வருத்தமளிக்கிறது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | இமென் கெலிஃபின் சாதனையால் குத்துச்சண்டையில் ஆர்வம் காட்டும் அல்ஜீரிய பெண்கள்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அல்ஜீரியா திரும்பிய கெலிஃபுக்கு அங்கு பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்தது. இதற்கு முன்னரும் இதுபோன்ற ஆதாரமற்ற ஆன்லைன் குற்றச்சாட்டுகளுக்கு அவர் ஃபிரான்ஸில் வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.