பிஎம்டபிள்யூ கார் விபத்து மதுவினால் ஏற்பட்டதாக சந்தேகம்!

பிஎம்டபிள்யூ கார் விபத்து மதுவினால் ஏற்பட்டதாக சந்தேகம்!மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்தியதாக சந்தேகம்விபத்தை ஏற்படுத்திய கார்

இருசக்கர வாகனத்தின் மீது பிஎம்டபிள்யூ கார் மோதிய விபத்தில், விபத்து ஏற்படுத்தியவர் மது அருந்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் வோர்லி பகுதியில் நேற்று அதிகாலை மீன் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை, அந்த பகுதி வழியாக வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது. இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த பிரதீப் நகாவா கீழே குதித்து உயிர் தப்பினார்.

ஆனால் அவரது மனைவி காவேரி நகாவா(45) சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ காரை வோர்லி போலீஸார் கைப்பற்றினர்.

விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய காரை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியின் முக்கியத் தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா ஓட்டியதாக கூறப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய பின், மிஹிர் ஷா அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மிஹிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா மற்றும் மிஹிர் ஷா உடன் பயணம் செய்த கார் ஓட்டுநர் ராஜ்ரிஷி பிடாவத் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை ஓட்டி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மிஹிர் ஷா, அந்த சம்பவத்தின்போது மது அருந்தியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஏனெனில், சம்பவத்திற்கு முன்னர் மிஹிர் ஷா மதுக்கடையில் இருந்தது தெரியவந்துள்ளது. விசாரணை மேற்கொண்டதில், மிஹிர் ஷா மதுக்கடையில் மதுவிற்காக மட்டும் ரூ.18,730 கட்டணமாகச் செலுத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் – சபாநாயகர் அப்பாவு

சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்