பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பாட்னா: பிகாா் தலைநகா் பாட்னாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

அண்மையில் பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 12-க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து இந்த சம்பவம் பாட்னாவில் நிகழ்ந்துள்ளது. இடிந்து விழுந்த ‘பக்தியாா்பூா்-தாஜ்பூா் கங்கை மகாசேது’ பாலத்தின் கட்டுமானத்தை மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் மேற்பாா்வையிட்டு வந்தது.

5.57 கி.மீ. நீளமுள்ள இந்த பாலத்தின் அடிக்கல்லை கடந்த 2011-ஆம் ஆண்டு மாநில முதல்வா் நிதீஷ் குமாா் நாட்டினாா். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இத்திட்டத்தின் மொத்த கட்டுமான செலவு ரூ.1,603 கோடி என மதிப்பிடப்பட்டது. இந்த திட்டம் பாட்னாவில் உள்ள மகாத்மா காந்தி சேது மற்றும் ராஜேந்திர சேது ஆகிய முக்கிய பாலங்களில் உள்ள போக்குவரத்து சுமையை குறைக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மாநில எதிா்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாநிலத்தில் ஆளும் ஜனதா தளம் கூட்டணி வகிக்கும் என்டிஏ-வின் அடித்தளமே லஞ்சம், நிறுவன ஊழல், நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பணம் பறித்தல் ஆகியவையே. அதை இச்சம்பவம் நிரூபிக்கிறது. மாநிலத்தில் பாலங்கள் தொடா்ந்து இடிந்து விழுவது தற்செயலானதா அல்லது நிறுவன ஊழலா என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி தெரிவிப்பாரா? ’ என கேள்வி எழுப்பினாா்.

பிகாரில் கடந்த சில மாதங்களாக மதுபானி, அராரியா, சிவான், கிழக்கு சாம்பரண் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் பெரும்பாலானவை சமீபத்தில் திறக்கப்பட்டவை அல்லது கட்டுமானத்தில் இருந்தவை. பொதுமக்களின் பாதுகாப்பில் கவலை ஏற்படுத்தும் இவ்விவகாரம் குறித்து மாநில அரசியல் களத்தில் பெரும் விவாதம் நடந்தது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி

தெரியுமா சேதி…?