பிக் பாஸ் 8: சக போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் ஜெஃப்ரி?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளம் போட்டியாளர் ஜெஃப்ரி சக போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படுவதைப் போன்ற சம்பவம் இன்று நடந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது நாளான இன்று (செப். 16) பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லாதவகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

தொலைக்காட்சித் தொகுப்பாளர்களைப் போன்று ஆண்கள் அணியினரும், அந்த தொகுப்பாளர்களிடம் பேசும் அழைப்பாளர்களைப் போன்று பெண்கள் அணியினரும் பேசியது பலரைக் கவர்ந்தது.

இதில், பெண்கள் அணியின் செயல்பாடுகள் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பொழுதுபோக்காக அமைந்தது.

ஜெஃப்ரியைப் பார்த்து சிரித்த போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் நடவடிக்கைகளுக்கு ஏற்ப வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் வாக்களிக்க வேண்டும். பெருவாரியாக யார் வாக்குகளைப் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

வரவேற்பரையில் அனைவரும் வரிசையாக அருகருகே அமர்ந்து வாக்களித்து வந்தனர். அப்போது வாக்கு சேகரிக்க ஜெஃப்ரி எழுந்து நின்றார். அவருக்கு யாரும் வாக்களிக்க கையைத் தூக்கவில்லை. இதனால், பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களில் ஜாக்குலின், ஆர்.ஜே. ஆனந்தி, விஜே விஷால், முத்துக்குமரன் உள்ளிட்ட சிலர் சிரித்தனர்.

இதனால், மனமுடைந்த ஜெஃப்ரி, போட்டியாளர்களிடம் நியாயம் கேட்டு வாதத்தில் ஈடுபட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இங்கு இருக்கும் அனைவரும் பலருக்குத் தெரிந்த பிரபலங்கள். இந்த வீட்டில் யாருக்கும் தெரியாத நபர் நான் ஒருவன் தான். அதனால் எனக்கு வாக்குகள் வரவில்லை. நானும் பிரபலான ஒருவனாக இருந்திருந்தால், உங்களுக்கு விழுந்த வாக்குகளைப் பிரித்திருப்பேன்.

பிக் பாஸ் கூறிய விதிமுறைகளுக்குட்பட்டு இங்கு வாக்கு சேகரிக்க நிற்கிறேன். நீங்கள் வாக்களிப்பதும், மறுப்பதும் உங்கள் விருப்பம். ஆனால், வாக்குகளைப் பெறாத என்னைப் பார்த்து சிரிப்பது மிகவும் தவறான செயல். நான் பேசுவதில் தவறு இருந்தால் கூறுங்கள். நான் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் சிரித்தது தவறு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

பவித்ராவுக்கும் யாருமே கையைத் தூக்கவில்லை. அவரைப் பார்த்து நான் சிரித்தேனா? இங்கு வீட்டில் உள்ள நபர்களால் அதிக வாக்குகள் பெற்ற நபர் பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெறுவார் என்ற நிச்சயம் உண்டா? நீங்கள் வாக்களித்தால்தான் நான் உள்ளே இருப்பேன், இல்லையென்றால் வெளியேறிவிடுவேன் என இல்லை. நீங்கள் இங்கு எங்கு படுத்து உறங்குகிறீர்களோ அங்குதான் நானும் உறங்கப்போகிறேன். நீங்கள் எங்கு விளையாடப்போகிறீர்களோ நானும் அங்குதான் விளையாடப்போகிறேன் என ஆதங்கத்துடன் பேசினார். பின்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்த பலரும் ஜெஃப்ரியிடம் மன்னிப்பு கோரினர்.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!