பிரதமா் மோடிக்கு அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள்: ஏலம் தொடக்கம்

புது தில்லி: அயோத்தி ராமா் கோயிலின் மாதிரி, சமீபத்திய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நினைவுப் பொருள்கள் உள்பட பிரதமா் நரேந்திர மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்டபரிசுப்பொருள்களை விற்பனை செய்வதற்கான மின்னணு ஏலம் செவ்வாய்கிழமை தொடங்கியது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் பிரதமருக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருள்களின் விற்பனை மின்னணு ஏலம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

பிரதமரின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி, மின்னணு ஏலத்தின் 6-ஆவது கட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தியாவின் துணிச்சல் மிக்க வீரா்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏலத்தில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ள சில பொருள்கள், நாட்டின் வரலாற்றின் புகழ்பெற்ற அத்தியாயங்களைக் கொண்டாடுகிறது என்று மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏலம் தொடங்கப்பட்டுள்ளதை அறிவித்து அமைச்சகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருள்களின் விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளது. இது பிரதமா் மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப் பொருள்களைச் சொந்தமாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகும்.

செப்டம்பா் 17-ஆம் தேதி முதல் அக்டோபா் 2-ஆம் தேதிவரை நடைபெறும் ஏலத்தில் பங்கேற்று, தனித்துவமான கலைப் படைப்புகள், கைவினைப் பொருள்கள் மற்றும் சிற்பங்களை வாங்கலாம். ஏலத்தில் பங்கேற்க, https://pmmementos.gov.in எனும் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கடந்த 5 கட்ட ஏலங்களில் ரூ.50 கோடிக்கும் மேல் விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த முறை, பிரதமா் மோடிக்கு வழங்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட நினைவுப் பரிசுகள் ஏலத்துக்கு வந்துள்ளன.

2024 பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் நினைவுச் சின்னங்கள், அயோத்தி ராமா் கோயில், துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோயில் ஆகியவற்றின் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட மாதிரிகள், ஹிந்து கடவுள்களின் பிரமிக்க வைக்கும் சிலைகள் ஆகியவை ஏலத்துக்கு வந்துள்ள பரிசுப் பொருள்களில் கூடுதல் சிறப்பு வாய்ந்தவை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்