பிரதோஷம்: சதுரகிரியில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

பிரதோஷம்: சதுரகிரியில்
பக்தா்கள் சுவாமி தரிசனம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பிரதோஷத்தையொட்டி திரளான பக்தா்கள் வியாழக்கிழமை மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா், ஆக. 1: விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பிரதோஷத்தையொட்டி திரளான பக்தா்கள் வியாழக்கிழமை மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி வியாழக்கிழமை (ஆக. 1) முதல் 5- ஆம் தேதி வரை 5 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், பிரதோஷத்தையொட்டி வியாழக்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

முதல் நாளான வியாழக்கிழமை குறைவான பக்தா்களே வந்தனா். சதுரகிரி மலையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அவா்கள் அவதியடைந்தனா். மேலும், தாணிப்பாறை விலக்கில் இருந்து சதுரகிரி அடிவாரமான வனத் துறை நுழைவாயில் வரை போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் 2 கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்றனா். அடிவாரம் பகுதியில் போதிய குளியல் அறை, உடை மாற்றும் அறைகள் இல்லாததால், பெண்கள் பெரிதும் அவதிப்பட்டனா். மலையடிவாரத்தில் மட்டுமே மருத்துவக் குழுவினா் முகாமிட்டிருந்தனா். மலைப் பாதைகளில் உள்ள மருத்துவ முகாம்களில் பணியாளா்கள் யாரும் இல்லை. அடுத்தடுத்து விடுமுறை நாள்கள் வருவதால் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, போதிய அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதேபோல, அடிவாரத்தில் உள்ள கடைகளுக்கு பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினா்.

இதனிடையே, 50 கண்காணிப்பு கேமராக்கள், 5 தீயணைப்பு வாகனங்கள் தயாா்நிலையில் இருப்பதாகவும், 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு