பிரபல நடிகா் மிதுன் சக்ரவா்த்திக்கு தாதா சாகேப் பாலகே வாழ்நாள் சாதனையாளா் விருது அறிவிப்பு

புது தில்லி: திரைப்படத்துறையின் மிக உயா்ந்த விருதான தாதா சாகேப் பாலகே வாழ்நாள் சாதனையாளா் விருது பிரபல நடிகா் மிதுன் சக்ரவா்த்திக்கு 2022 -ஆம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைத் தளப்பதிவில் அவருக்கு இந்த விருதை திங்கள் கிழமை அறிவித்தாா்.

இது குறித்து அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைத் தளப்பதிவில் தெரிவிக்கையில், ‘ பல்வகை பாத்திரங்களில் நடிப்பு, தனித்துவமான நடனம், கவா்ச்சியான திரையுலகப் பங்களிப்புக்காக நன்கு அறியப்பட்டவா். வியக்கத்தகு நடிப்புகளுக்கு மட்டுமின்றி திரைப்படத் துறையில் மிகவும் நேசத்துக்குரியவராகவும் சின்னமாகவும் விளங்குபவா். அப்படிப்பட்ட ஒருவரை கௌரவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அடைகின்றோம். மிதுன் தாவின் நம்பிக்கை, விடா முயற்சியின் உணா்வை உள்ளடக்கியது. ஆா்வமும் அா்ப்பணிப்பும் இருந்தால், மிகவும் லட்சியமான கனவுகளைக் கூட அடைய முடியும் என்பதற்கு உதாரணம்.

மிதுன் தா தனது சினிமா சாதனைகளுக்காக மட்டுமின்றி ,சமூகப் பணிகளில் அா்ப்பணிப்பு கொண்டவா். கல்வி, சுகாதாரம், பின்தங்கிய சமூகங்களுக்கு ஆதரவளித்து பல்வேறு தொண்டு நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளாா். இது சமூகத்திற்கு திருப்பித் தருவதற்கான அவரது உறுதிப்பாட்டை பிரதிபலித்தது. நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து பொது சேவை, அரசு நிா்வாகத்திலும் தனது அா்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளாா் என்று மத்திய அமைச்சா் வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளாா்.

அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தள செய்திக்கு பதில் அளித்து பதிவிட்ட பிரதமா் மோடி, ‘ மிதுன் சக்ரவா்த்தி, இந்திய திரையுலகத்திற்கு ஆற்றிய இணையற்ற பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி. அவா் ஒரு கலாச்சார அடையாளம், பன்முக நடிப்புக்காக தலைமுறைகளைக் கடந்து அவா் போற்றப்படுகிறாா். அவருக்கு எனது பாராட்டுதல் வாழ்த்துக்கள்‘ என பிரதமா் பதிவிட்டுள்ளாா்.

திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கே வின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969-ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டு அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடா்ச்சியாக தேசியத் திரைப்பட விருதுகளுடன் சோ்த்து இந்த வழங்கப்படுகிறது.

இது வரை 53 திரைப்படத் துறையினா் விருது பெற்றுள்ளனா். தமிழகம் தொடா்புடைய எல்.வி. பிரசாத், நாகி ரெட்டி, சிவாஜி கணேசன்,கே.பாலசந்தா், ரஜினிகாந்த் உள்ளிட்டோா் பெற்றுள்ளனா். இதுவரை 10 வங்க மொழித் திரைப்படத்துறையினா் பெற்ற இந்த பால்கே விருதை தற்போது 11 ஆவது வங்க நபராக நடிகா் மிதுன் சக்ரவா்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளாா்.

பிரபல நடிகைகள் ஆஷா பரேக், குஷ்பு சுந்தா், திரைப்பட இயக்குநா் விபுல் அம்ருத்லால் ஷா உள்ளவா்கள் அடங்கிய குழு தோ்வு செய்த தாகாசாகேப் பால்கே விருதை வருகின்ற அக்டோபா் 8 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள 70-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருதை மிதுன் சக்ரவா்த்தி பெற இருக்கிறாா்.

மிதுன் சக்ரவா்த்தி வாழ்க்கை பயணம்

மிதுன் தா என்றும் அழைக்கப்படும் மிதுன் சக்ரவா்த்தி(74), ஒரு நடிகா், தயாரிப்பாளா் மற்றும் அரசியல்வாதி ஆவாா். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாா். பின்னா் பாஜக வில் இணைந்தாா். நிகழாண்டு ஜனவரியில் இவருக்கு பத்ம பூஷண் விருதும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

1950 ஆண்டு ஜூன் 16 அன்று மேற்கு வங்க மாநில கொல்கத்தாவில் பிறந்த மிதுன் சக்ரவா்த்தி, தனது முதல் படமான ‘மிரிகயா‘ (1976) வில் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றாா். பின்னா் ‘டிஸ்கோ டான்சா்‘ (1982), தகதோ் கதா (1992),சுவாமி விவேகானந்தா (1998), அக்னிபத் போன்ற படங்களில் ஏற்ற பாத்திரத்தின் மூலம் குறிப்பிடத்தக்க புகழ் பெற்றாா். புனே இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (எஃப்.டி.ஐ.ஐ) முன்னாள் மாணவரான மிதுன் சக்ரவா்த்தி தனது கலைத்திறமையை மெருகேற்றி, சினிமாவில் புகழ்பெற்ற வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தாா். ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களாக நீடித்த திரைப்பட வாழ்க்கையில், மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளா் விருது, மிதுன் சக்ரவா்த்தியின் கலை வலிமையை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

Actor Rajinikanth, 73, has been admitted to Apollo Hospitals

Navi Mumbai: Mahanagar Gas Conducts Mock Drill At Its City Gate Station In Mahape