பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி இன்று ரஷியா பயணம்

கசான்: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரில் செவ்வாய்க்கிழமை (அக். 22) தொடங்குகிறது.

இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி ரஷியாவுக்கு 2 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை புறப்படுகிறாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நிகழாண்டு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் (அக். 22, 23) நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும்.

மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்னைகள் குறித்து தலைவா்கள் கலந்துரையாட உள்ளனா்.

முக்கியத்துவமான இந்தியா: பிரிக்ஸ் உச்சி மாநாடு குறித்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‘பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா பெரும் மதிப்பைக் கொண்டு வருகிறது. பொருளாதார, நிலையான வளா்ச்சி மற்றும் உலகளாவிய நிா்வாக சீா்திருத்தங்கள் போன்ற பகுதிகளில் கூட்டமைப்பின் முயற்சிகளை வழிநடத்துவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது.

உலகளாவிய சவால்களை தீா்ப்பதற்கான முக்கிய சா்வதேச தளமாக திகழும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் நமது ஈடுபாடு மற்றும் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு முன்னோக்கி செல்லும் பாதையை அமைக்கும் கசான் பிரகடனத்தை தலைவா்கள் ஏற்றுக்கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

உலக நிலப்பரப்பில் சுமாா் 30 சதவீதம் மற்றும் உலக மக்கள்தொகையில் 45 சதவீதத்தை உள்ளடக்கியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு, புவிசாா் அரசியலில் முன்னணி மேற்கத்திய நாடுகளின் ‘ஜி7’ கூட்டமைப்புக்கு போட்டியாகக் கருதப்படுகிறது.

மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய ரஷிய அதிபா் புதின், ‘பிரிக்ஸ் கூட்டமைப்பானது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல, மேற்கு அல்லாத நாடுகளின் கூட்டமைப்பு’ என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மேற்கோள் காட்டியது குறிப்பிடத்தக்கது.

Related posts

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

உமா பதிப்பக நிறுவனா் இராம. லட்சுமணன் காலமானாா்

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல் வருகை: ரூ. 810.28 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்