பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய ரபேல் நடால் – ரசிகர்கள் அதிர்ச்சி

தனது கடைசி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பாரீஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நாடல், ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

14 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் நடால் முதல் சுற்றிலேயே வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னதாக ரபேல் நடால் தனது 19 ஆண்டுகால பிரெஞ்சு ஓபன் வாழ்க்கையை இந்த சீசனுடன் முடித்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. பிரெஞ்சு ஓபனில் அவர் புரிந்த சாதனை மற்றும் நற்பெயரை ஒருபோதும் ஒப்பிட முடியாது. இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பிரெஞ்சு ஓபனில் வென்றுள்ளார். களிமண் ஆடுகளத்தின் ராஜா என்றும் அவர் புகழப்பட்டு வருகிறார்.

22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்பெயின் வீரர் நடால், 2005 ம் ஆண்டில் ரோலண்ட் கரோசில் தனது முதல் பட்டத்தை வென்றார். இன்னும் ஒரு வாரத்தில் ( வரும் திங்கட்கிழமை) அவர் தனது 38வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய ஆக்கி: தமிழ்நாடு – அந்தமான் நிக்கோபார் அணிகள் இன்று மோதல்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்