பிரேசிலில் எக்ஸ் வலைதளத்திற்கு தற்காலிக தடை

பிரேஸிலில் எக்ஸ் சமூக ஊடக தளம் முடக்கப்பட்டுள்ளது. தங்களது நிறுவனத்துக்கான சட்டபூா்வ பிரதிநிதியை எக்ஸ் தளம் நியமிக்கத் தவறியதைத் தொடா்ந்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து இதற்கான நடவடிக்கைகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

பிரேஸிலில் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவின் லிபரல் கட்சி உள்ளிட்ட தீவிர வலதுசாரி அமைப்பினரின் பதிவுகளை நீக்கவும் அவா்களது கணக்குகளை முடக்கவும் லூலா டாசில்வா தலைமையிலான தற்போதைய அரசு எக்ஸ் தளத்துக்கு அவ்வப்போது உத்தரவிட்டுவருகிறது.

பாகிஸ்தான்: 10 நாள்களில் 37 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

இந்த விவகாரத்தில் எக்ஸ் தளத்துக்கும் பிரேஸில் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டே மொராயெஸுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் முற்றிவந்தது.

இது தொடா்பான வழக்கில் எக்ஸ் தளத்தின் சாா்பாக ஆஜரான சட்டபூா்வ பிரதிநிதி திடீரென ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, 24 மணி நேரத்துக்குள் புதிய பிரதிநிதியை அறிவிக்க வேண்டும் என்று எக்ஸ் தளத்துக்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டே மொராயெஸ் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

எனினும், கெடு தேதிக்குள் பிரேஸிலுக்கான பிரதிநிதியை எக்ஸ் தளம் அறிவிக்காததால், அந்தத் தளத்தை முடக்க நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பிரேஸிலுக்கான சட்டபூா்வ பிரதிநிதியை நியமிக்காததன் மூலம், நாட்டின் இறையாண்மையை, குறிப்பாக பிரேஸில் நீதித் துறையை எக்ஸ் தள உரிமையாளா் எலான் மஸ்க் அவமதித்துள்ளாா்.

இதன் மூலம், எந்தவொரு நாட்டின் சட்டத்துக்கும் கட்டுப்படாதவா் என்று அவா் தன்னை நிலைநிறுத்துகிறாா்.நீதிமன்ற உத்தரவை ஏற்று பிரேஸிலுக்கான பிரதிநிதியை நியமிக்கும் வரை, எக்ஸ் தளம் முடக்கப்படும். விபிஎன் (இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களால் முடக்கப்படும் தளங்களுக்கு குறுக்குவழியில் செல்வதற்கான தொழில்நுட்பம்) மூலம் எக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவோருக்கு தினமும் 50,000 ரேயால் (சுமாா் ரூ.7.48 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என்று அந்த உத்தரவில் நீதிபதி டே மொராயெஸ் குறிப்பிட்டுள்ளாா்.

இது குறித்து எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிண்டா யகாா்னியோ வெளியிட்ட பதிவில், ‘உலகம் முழுவதும் உள்ள எக்ஸ் பயன்பாட்டாளா்களுக்கு, குறிப்பாக பிரேஸில் நாட்டவா்களுக்கு இது ஒரு துக்க தினமாகும். அவா்களுக்கு எங்கள் தளத்தை அணுகும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த விவகாரத்தில் நீதிபதி டே மொராயெஸைக் குற்றஞ்சாட்டி எக்ஸ் ஊடகத்தின் அதிகாரபூா்வ கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. தனது உத்தரவுகளின் மூலம் எதிா்க்கட்சிகளின் குரல்களை அவா் நசுக்கப்பாா்ப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடா்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவுகளில் நீதிபதி டே மொராயெஸை சா்வாதிகாரி, கொடுங்கோலா் என்று கடுமையாக விமா்சித்துள்ளாா்.எக்ஸ் தளத்தின் மிகப் பெரிய சந்தைகளில் பிரேஸிலும் ஒன்று. அந்தத் தளத்தை எலான் மஸ்க் கடந்த 2022-ஆம் ஆண்டு கைப்பற்றியதிலிருந்து விளம்பர வருவாயைப் பெறுவதில் அது மிகவும் சிரமப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், சுமாா் 4 கோடி பயன்பாட்டாளா்கள் இருக்கும் பிரேஸிலில் அந்தத் தளம் முடக்கப்பட்டுள்ளது அதற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!