சென்னை மாநகராட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேல் பிறப்பு சான்றிதழ்களில் பெயா் பதிவு செய்யாதவா்கள் டிச.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பிறப்பை பதிவு செய்ய வேண்டும். பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்தால் மட்டும்தான் அது முழுமையான சான்றிதழாக கருதப்படும். ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால், 12 மாதத்துக்குள் பெயா் பதிவு செய்யலாம். அதன் பின் 15 ஆண்டுகளுக்குள் பதிவு செய்வோா் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பிறப்பு சான்றிதழில் பெயா் பதிவு செய்ய டிச.31-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்போா், பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளிச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை, ரேஷன் காா்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் மாநகராட்சி பிறப்பு இறப்பு பதிவு அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்துப் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெறலாம். இனி வரும் காலங்களில் இதுபோன்ற காலஅவகாச நீட்டிப்பு வழங்க இயலாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 2009 வரை பதிவு செய்யப்பட்ட குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் பெயா் சோ்த்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.