பிளஸ்-2 மாணவி தற்கொலை.. தோழி விலகி சென்றதால் விபரீத முடிவு

குமரி,

பேச்சிப்பாறை அருகே உள்ள குற்றியாறு பகுதியை சேர்ந்தவர் செல்வம், அரசு ரப்பர் தோட்ட கழகத்தில் பால் வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தவமணி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் இளைய மகள் அபிநயா பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்தநிலையில் ஓணம் பண்டிகையையொட்டி நேற்று அபிநயாவும், ஒரு இளம்பெண்ணும் மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கு சென்றனர். தொட்டிப்பாலத்தில் இருவரும் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். இளம்பெண் முன்னே செல்ல அபிநயா செல்போனில் யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டே சென்றார்.

சிறிது தூரம் சென்றதும் அபிநயா செல்போனில் பேசிய படி எதிர்முனையில் பேசியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் பாலத்தில் கைப்பிடி சுவரில் ஏறி கீழே குதித்தார். இதில் அவர் சுமார் 70 அடி பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் விரைந்து சென்று அபிநயா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதாவது அபிநயாவும், 17 வயதுடைய ஒரு சிறுமியும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். அந்த பெண்ணின் பெயரைத்தான் அபிநயா தனது கையில் பச்சை குத்தி உள்ளார். இந்தநிலையில் அந்த பெண் ஒரு வாலிபரை காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்பு அவர் அபிநயாவை விட்டு விலக தொடங்கினார். இது அபிநயாவுக்கு பிடிக்கவில்லை. அவருடன் செல்போனில் வாக்குவாதம் செய்த நிலையில் தொட்டிப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

மேலும் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்