என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 12-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய தொழில்நுட்ப படிப்புகள் உள்ளன. இதற்கான 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மே மாதம் 6-ந்தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் என்ஜினீயரிங் படிப்புக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தார்கள்.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 42 ஆயிரத்து 983 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதில், ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 570 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளார்கள். ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 68 மாணவர்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. விருப்பமுள்ள மாணவர்கள், www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 12-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே, மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண் வழங்கப்படும். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வருகிற 12-ந்தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. அதற்கு தகுதி பெற்ற மாணவர்களின் விவரங்கள், www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்பிறகு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 13-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் 10-ந்தேதி வௌியிடப்பட உள்ளது. விரைவில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.