புதிய உயிரி பொருளாதார கொள்கை: மத்திய இணையமைச்சர் பெருமிதம்

புது தில்லி: "உயிரி-இ3' கொள்கை இந்தியாவின் உற்பத்தித் துறையில் 4ஆவது புரட்சியை ஏற்படுத்தும் என்றும், 2030இல் உயிரி பொருளாதார வளர்ச்சி ரூ.27 லட்சம் கோடியை எட்டும் என்றும் மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை பெருமிதம் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 24}ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உயிரி தொழில்நுட்பத் துறைக்கு "பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு' என்ற "உயிரிஇ3' கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தக் கொள்கையின் முக்கிய அம்சங்களை மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு விளக்கினார்.

அவர் கூறியது வருமாறு: ஆராய்ச்சி}மேம்பாடு, தொழில்முனைவோருக்கான புதுமை ஆகியவை இந்த "உயிரிஇ3' கொள்கையின் முக்கிய அம்சங்கள் ஆகும். சர்வதேசத் தரத்திற்கு ஏற்ப, நெறிமுறை சார்ந்த உயிரி பாதுகாப்பு கோட்பாடுகள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டு, அவற்றில் கவனம் செலுத்தப்படும். ரசாயன அடிப்படையிலான தொழில்களிலிருந்து நிலையான உயிரி அடிப்படையிலான மாதிரிகளுக்கு மாறுதல்; உயிரி தயாரிப்பு பொருள், பசுமை வாயுகள், குப்பை கழிவுப் பயன்பாட்டின் மூலம் நிகர பூஜ்ய கரியமில வாயு உமிழ்வை அடைதல்; உயிரி அடிப்படையிலான தயாரிப்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்தல்; வேலை வாய்ப்பு உருவாக்கத்தை விரிவுபடுத்துதல் போன்றவை இதில் அடங்கும்.

அதிநவீன உயிரி உற்பத்தி, உயிரி செயற்கை நுண்ணறிவு மையங்கள் ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் தொழில்நுட்ப மேம்பாடு எட்டப்படும். இது வணிகமயமாக்கலையும் துரிதப்படுத்தும். பசுமை வளர்ச்சியை மீளுருவாக்கம் செய்யும் உயிரி பொருளாதார மாதிரிகளுக்கு இந்தக் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது. இக்கொள்கை நாட்டின் திறமையான தொழிலாளர் சக்தியை விரிவுபடுத்துவதால், வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

நாட்டின் உயிரி பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டில் ரூ.62,000 கோடியாக இருந்த உயிரி பொருளாதாரம், நிகழாண்டில் ரூ.10,79,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தத் துறையின் பொருளாதார வளர்ச்சி வருகின்ற 2030}ஆம் ஆண்டில் ரூ. 27 லட்சம் கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கொள்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை தூண்டும் என்பதுடன் இந்தியாவின் உற்பத்தித் துறையில் 4}ஆவது புரட்சியை ஏற்படுத்தும் என்றார் ஜிதேந்திர சிங்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!