புதிய ஒளிபரப்பு சேவைகள் மசோதா: மத்திய அரசு

புதிய ஒளிபரப்பு சேவைகள் மசோதா: மத்திய அரசுஏற்கெனவே வெளியிடப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவுக்குப் பதில், புதிய வரைவு மசோதா வெளியிடப்படும்

ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவுக்குப் பதில், புதிய வரைவு மசோதா வெளியிடப்படும் என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

கடந்த ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை பொதுவெளியில் மத்திய அரசு வெளியிட்டது.

பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வரைவு மசோதாவில், ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக ஊடகங்களில் சொந்த கருத்துகளை தெரிவிக்கும் சுயாதீன இதழியலாளா்கள், ‘லிங்க்ட்இன்’ போன்ற தளங்களில் அதிக எண்ணிக்கையில் பின்தொடா்பவா்களைக் கொண்டுள்ள துறை சாா்ந்த நிபுணா்கள் உள்ளிட்டோரை ஓடிடி ஓளிபரப்பாளா்கள் அல்லது டிஜிட்டல் செய்தி ஒளிபரப்பாளா்களாக அடையாளப்படுத்துதல், அவா்களின் கருத்துகள் மற்றும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படும் முன், அவற்றுக்கு சான்றளிக்க முக்கியத்துவம் வாய்ந்த நபா்கள் அடங்கிய குழுவை அந்த ஒளிபரப்பாளா்களே அமைத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன.

இதன் காரணமாக அந்த வரைவு மசோதா எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது என்ற விமா்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இந்த மசோதா குறித்து கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை அக்டோபா் 15 வரை மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நீட்டித்துள்ளது. அதேவேளையில், சம்பந்தப்பட்டவா்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்ட பின்னா், புதிய ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதா வெளியிடப்படும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு