புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மழை விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மழை விடுமுறை

புதுச்சேரி: கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இடையில் ஒரு சில நாட்கள் இரவில் மழை பெய்தாலும், பகலில் வெயில் வாட்டி வதைத்தது. அண்மையில் பகலில் கடுமையான மழை பெய்தது. இந்த மழையால் நகர பகுதி சாலைகள் முழுவதும் வெள்ளக்காடானது. வாகனங்களில் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே, நாளை முதல் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் அடுத்தடுத்து உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவையில் 3 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், புதுவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் புதுவையில் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். மழை காரணமாக புதுச்சேரியில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உள்ளது. அதேசமயம், அரசுப் பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ தேர்வுகள் முடிந்து வரும் 20ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில், கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறுகையில், "கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை (அக். 15) விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று அமைச்சர் கூறினார்.

Related posts

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 2 நாட்கள் ரத்து

இந்திய தூதர்கள் வெளியேற்றம்… கனடா தூதர்கள் 6 பேரை வெளியேற்றி இந்தியா பதிலடி

சென்னையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை