புயல் சின்னத்தின் ஹாட்ஸ்பாட் ஆகும் சென்னை – புதுச்சேரி: தமிழ்நாடு வெதர்மேன்

தென் தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த வாரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு அல்லது புயல் சின்னம் காரணமாக வடதமிழகத்தில் வரும் வாரத்தில் அதாவது அக்.14-17ஆம் தேதிக்குள் பெய்யவிருக்கும் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கணித்துக் கூறியிருக்கிறார்.

இது பற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மேலடுக்கு காற்று சுழற்சிக்கு அருகே மிகச் சிறப்பான வெப்பச்சலனம் ஏற்பட்டுள்ளது.

மேலடுக்கு காற்று சுழற்சியானது வடக்கு தமிழகம் அல்லது தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க.. கவரப்பேட்டை ரயில் விபத்து: பழிசுமத்தும் விளையாட்டு ஆரம்பம்!

மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது குறைந்த காற்றழுத்தப் பகுதியாக தீவிரமடையத் தொடங்கும், பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியபிறகு புயல் சின்னமாக உருவெடுக்கும். இப்போது அதனுடன் ஒரு பரந்த மேகக் கூட்டங்களின் சுழற்சி காணப்படுகிறது. மேகக் கூட்டங்கள் பரந்து காணப்படுவதை படங்களிலும் காணலாம்.

மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

தற்போதைய நிலவரப்படி, இந்த புயல் சின்னத்தின் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக தொடர்ந்து பாண்டி-சென்னை-நெல்லூர்-காவலி பகுதிகளாகவே இருந்து வருகின்றன. இதில் எந்த மாற்றமும் இல்லை.

இதனால், அக்.14 முதல் 17 வரை கனமழை நீடிக்கும். ஆனால், எப்போது கனமழை தொடங்கும் என்ற நாளை அல்லது நேரத்தை குறிப்பிட்டுச் சொல்வது தற்போதைய நிலையில் சற்று கடினமானதாக உள்ளது.

ஆனால், ஒன்றை மட்டும் சொல்லலாம், அதாவது, இந்த 4 நாள்களில் புதுச்சேரி- (சென்னை) காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு – நெல்லூர் பகுதிகளில் ஒரே ஒரு நாளாவது கனமழை பெய்யும்.

ஒருவேளை, குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது வட தமிழகம் அருகே வந்து நிலைகொண்டு விட்டாலோ அல்லது மெதுவாக நகர்ந்தாலோ அந்த 3 முதல் 4 நாள்களும் வட தமிழகம் கனமழையை பெறும் வாய்ப்பு உள்ளது.

எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், குறிப்பிட்ட இந்த காலத்தில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்று நாள் எப்படி?

சனிக்கிழமை – கொங்கு (மேற்கு), உள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி ஒருங்கிணையும் வரை, உள் மாவட்டங்களில் கனவு நாள்கள் என்று சொல்லப்படும் மழை நாள்கள் 2 முதல் 3 நாள்கள் தொடரும். நேற்று பெய்த மழை ஆச்சரியத்தின் உச்சம். இன்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். இந்த மாவட்டம்தான் என்று ஒரு மாவட்டத்தின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லிவிடமுடியாது. பொதுவாக அனைத்து உள் மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும். மதுரை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, தர்மபுரி, திருச்சி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை பெய்யும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில், திடீர் திடீரென மழை பெய்யும், இந்த நிலையே ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும். அதன்பிறகு அதாவது திங்கள்கிழமை முதல் மழைக்கான வேகம் சூடுபிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!