புரி ஜெகன்நாதர் கோயிலில் இவ்வளவு தங்கமா? திறக்கப்பட்ட பொக்கிஷ அறை!

புரி ஜெகன்நாதர் கோயிலில் இவ்வளவு தங்கமா? 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பொக்கிஷ அறை!

புரி ஜெகன்நாதர் கோயில்

உலக பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய பொக்கிஷ அறையில் என்னதான் உள்ளது என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரசித்த பெற்ற ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் கோயில், சர்ச்சை காரணங்களுக்கு அண்மைக்காலமாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தேர்தல் பரப்புரையின் போது புரியில் பேசிய பிரதமர் மோடி, ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறைகளின் தொலைந்து போன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டதாக பேசியிருந்தார்.

விளம்பரம்

முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி. கார்த்திகேயன் பாண்டியனை குறிப்பிடும் வகையில் பேசியது, அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய பிரளயத்தை உண்டாக்கியது.

பிரதமரின் இந்தப் பேச்சிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. ஓடிசாவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் அளவுக்கு கோயிலின் கருவூலத்தை திறப்பதும் அங்கம் வகித்திருந்தது.

இந்தப் பின்னணியில்தான், 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூலமான ரத்னா பந்தர் எனப்படும் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது.

விளம்பரம்

இந்த கோயிலின் மூலவராக கிருஷ்ணர், சுபத்ரா, பலராமன் உள்ளனர். இப்புராதனக் கோயிலில் தரைப்பகுதிக்கு அடியில் பொக்கிஷ அறை உள்ளது. இதில், 128.38 கிலோ தங்கம், 221.53 கிலோ வெள்ளி ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த ரத்னங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆபரணங்கள் ஜெகந்நாதரின் ரத யாத்திரை போன்ற விசேஷ நாட்களில் சிலைகளை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 46 ஆண்டுகளாக பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை.

கடைசியாக 1978 ஆம் ஆண்டு மே 13 முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை ரத்னா பந்தர் எனப்படும் பொக்கிஷ அறை திறக்கப்பட்டது. இதனிடையே, 1985 இல் பொக்கிஷ அறையை தொல்லியல் துறை குழு ஆய்வு செய்ய சென்ற போது, நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி திரும்பிவிட்டது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போனதாக கூறப்பட்டது.

விளம்பரம்

இந்த நிலையில்தான், ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பொக்கிஷ அறையை திறக்க அனுமதி அளித்து ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இங்குள்ள ஆபரணங்களை கணக்கிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நீண்டநாட்கள் கழித்து திறக்கப்படுவதால் பாம்பு பிடிவீரர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இது குறித்து ஜெகந்நாதர் கோயில் நிர்வாகத் தலைவர் அரபிந்தா பதீ(Arabinda Padhee) கூறுகையில், ரத்னா பந்தர் கணக்கீட்டுப் பணி முழுவதும் பதிவு செய்யப்படும் என்றும் அவை ரகசியமாக வைக்கப்படும் எனவும் கூறினார்.

விளம்பரம்

மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி முன்னிலையில் பொக்கிஷ அறையில் உள்ள பொருட்களைக் கணக்கிடும் பணிகள் நடைபெறும் என்றும் அனைத்தும் கணக்கிட்ட பிறகு, டிஜிட்டல் பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் நகை மதீப்பீட்டாளர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதையும் படிங்க:
உலகே வியக்கும் வகையில் நடைபெற்ற அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா!

தற்போது பொக்கிஷ அறை திறக்கப்பட்டாலும், அரசிடம் இருந்து அனுமதி பெற்ற பிறகு கணக்கீடு பணிகள் நடைபெறும் என தெரிவித்த அதிகாரிகள், இதற்கான பணிகளை முடிக்க சுமார் 70 நாட்கள் வரை ஆகலாம் எனக் கூறினர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Puri Jagannath temple

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்