புல்டோசர் நடவடிக்கை குறித்து சரமாரி கேள்வியெழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு – ராகுல்காந்தி வரவேற்பு

புதுடெல்லி,

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில், 'புல்டோசர் நடவடிக்கை' என்கிற பெயரில், குற்றம்செய்பவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் குற்றம் செய்யப்பட்டவர்கள் வீடுகள் மட்டுமன்றி, மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவா்களின் வீடுகளும் இடிக்கப்படுகின்றன. இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கூறுகையில், குற்ற வழக்கில் தொடா்புடையவா் அல்லது குற்றவாளி என்பதற்காக ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்? உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் இதுபோன்று செய்ய முடியாது. இதுதொடா்பாக, நாடு முழுமைக்குமான வழிகாட்டுதலை சுப்ரீம் கோர்ட்டு வகுக்கும்" என்று குறிப்பிட்டு, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-

மனித நேயத்தையும், நீதியையும் புல்டோசரின் கீழ் நசுக்கிய பாஜக-வின் அரசியல் சாசனத்திற்கு எதிரான முகம் தற்போது நாட்டின் முன் அம்பலமாகியுள்ளது. இந்த மிக முக்கியமான பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றும், பாஜக அரசாங்கங்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்கில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தால் நாடு இயங்கும், அதிகாரத்தின் சாட்டையால் அல்ல. சமீப காலமாக நாட்டில் தொடங்கியுள்ள புல்டோசர் கலாச்சாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் அவதானிப்பு வரவேற்கத்தக்கது. குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டின் மீது புல்டோசர் ஓட்டுவது நீதியல்ல. உடனடி நீதி போன்ற கோட்பாடுகள் ஒரு நாகரிக மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை ஆத்மாவுக்கு முற்றிலும் எதிரானவை." இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

US To Test Hypersonic Nuclear Missile After Polls Close: Report

2024 Maruti Suzuki Dzire Officially Revealed, Launch On November 11