பெங்களூரு சாலைகளில் படகில்தான் செல்ல முடியும்..! மக்கள் ஆதங்கம்

பெங்களூரு சாலைகளில் கனமழையால் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று(அக். 21) இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. விடாது பெய்த மழையால், நகரின் பல பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, முக்கிய வழித்தடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது.

மேலும், இரவு பெய்த கனமழையால் பெங்களூரில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்க வேண்டிய 4 விமானங்கள் சென்னை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இதைத்தொடர்ந்து, பெங்களூரு மாநகர மழைநீர் வடிகால் அமைப்பு உள்கட்டமைப்புகள் மோசமான நிலையில் இருப்பதாக மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதன் வெளிப்பாடாக, மாநகரின் சாலைகளை வெள்ளம் மூழ்கடித்துச் செல்வதை படம்பிடித்து சமூக வலைதளங்களில் கேலி செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவின் மென்பொருள் தலைநகரமாகத் திகழும் பெங்களூருக்கு இப்படியொரு நிலைமையா என சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர் அங்குள்ள மக்கள். மழைநீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலையில், சாலைகள் ஆறுகளாக மாறிவிட்டதாக கேலி செய்யும் பதிவுகளும் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதனிடையே, கர்நாடகத்தில் பரவலாக, அதிலும் குறிப்பாக பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு ஊரக மாவட்டங்களிலும், தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்றும்(அக். 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!