பெண்கள் கிரிக்கெட்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

சென்னை,

தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இவ்விரு அணி வீராங்கனைகளும் சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் டெஸ்ட் இதுவாகும். பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மாவும், பந்து வீச்சில் ரேணுகா சிங், தீப்தி ஷர்மா, சினே ராணாவும் இந்திய அணிக்கு வலுசேர்க்கிறார்கள். உள்ளூர் சூழல் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். உமா சேத்ரி, பிரியா பூனியா, சாய்கா இஷாக், அருந்ததி ரெட்டி, ஷப்னம் ஷகில் உள்ளிட்டோர் புதுமுக வீராங்கனைகளாக இடம் பிடித்துள்ளனர்.

அதே சமயம் ஒருநாள் தொடரை இழந்த லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நேற்று அளித்த பேட்டியில், 'அடுத்த ஆண்டு நமது நாட்டில் நடைபெற இருக்கும் பெண்களுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக உள்ளூரில் உள்ள வெவ்வேறு ஆடுகளங்களின் தன்மைக்கு தகுந்தபடி விளையாடி பழகுவதற்கு இந்த தொடர் அருமையான வாய்ப்பாகும். ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதுடன் அதற்கு தகுந்த மாதிரி வீராங்கனைகளை களம் இறக்குவதை முடிவு செய்யவும் உதவிகரமாக இருக்கும். சென்னை ஆடுகளத்தை பார்க்க நன்றாக இருக்கிறது. ஒன்று அல்லது 2-வது நாளில் இருந்து பந்து சுழன்று திரும்பும் என்று நம்புகிறோம்' என்றார்.

சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு பெண்கள் டெஸ்ட் மட்டுமே நடந்து இருக்கிறது. 1976-ம் ஆண்டு நடந்த அந்த டெஸ்டில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. அது டிராவில் முடிந்தது. அதன் பிறகு இங்கு இப்போது தான் பெண்கள் டெஸ்ட் நடக்க உள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசமாகும்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி