பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் உள்ளூர் புகார் குழு: அதிரடி உத்தரவு!

சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்து பல்வேறு திட்டங்களையும், நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. அதற்கு, விடியல் பயணம், புதுமைப்பெண் ஆகிய திட்டங்கள் சான்றுகளாகவும் அமைந்துள்ளன.

இந்த நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே.

அந்த அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள். மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 இன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் உள்ள புகார் குழு (Internal Complaints Committee) அமைக்க வேண்டும். இந்த குழுவில் குறைந்தபட்சம் 5 உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அவற்றில் அதிகபட்சமாக (3) பெண் உறுப்பினர்கள் இருக்கவேண்டும்.

இந்த சட்டத்தின் கீழ் புகார் அளிக்க ஏதுவாக நிறுவனம் புகார்பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகார்கள் பெறப்பட்டவுடன் உள்ளூர் புகார்குழு உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.

இதையும் படிக்க |‘உங்கள் இழப்பு…’ – ரத்தன் டாடாவின் முன்னாள் காதலியின் இரங்கல் பதிவு!

பத்துக்கும் குறைவாக பணியாளர்கள் அல்லது வீட்டு வேலை செய்பவர்கள் பாதிக்கப்பட்டால் அந்நபர் தனது முதலாளிக்கு எதிராக நேரடியாக மாவட்டங்களில் செயல்படும் உள்ளூர் புகார்குழு (Local Complaint Committee) இல் மனு அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் புகார் குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் நடவடிக்கை குறித்து ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட சமூகநல அலுவலத்தில் அறிக்கையாக ஒவ்வொரு நிறுவனமூம் ஆண்டு அறிக்கையாக வழங்கப்பட வேண்டும்.

உள்ளூர் புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் அல்லது பதிவு ரத்து செய்யப்படும். இந்த புகார்குழு ஏற்படுத்தாத நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ. 50,000 வரை அபராதம் செலுத்த நேரிடும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார்களை www.shebox.nic.in என்ற இணையதள முகவரியில் புகார்களை பதிவு செய்யலாம்.

எனவே, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளூர் புகார்குழு அமைக்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக