பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வுக்கான நேரம் இது: குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

பெண்களுக்கான மரியாதையை அதிகரித்து எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொது விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது’ என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

‘தடைகளை உடைத்தல்’ என்ற கருப்பொருளுடன் ‘ஷீ சக்தி மாநாடு-2024’ தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக தனியாா் செய்தி நிறுவனம் சாா்பாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு காணொலி வாயிலாக உரையாற்றினாா்.

அப்போது அவா் பேசியதாவது: நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும், பெண்களுக்கான பாதுகாப்பின்மை சூழல் தொடா்வது துரதிருஷ்டவசமானது.

பெண்களின் தொடா்ச்சியான போராட்டம், அவா்களை பலவீனமாகக் கருதும் குறுகிய மனப்பான்மை கொண்ட சமூகம் மற்றும் பழமைவாதத்திற்கு எதிரானது. சமுதாயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஆழமாக வேரூன்றிய சில பழமைவாதம், பெண்களின் சமத்துவத்திற்குத் தடையாக இருக்கிறது.

எங்கே தவறிவிட்டோம்? இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற கடினமான சில கேள்விகளை ஒரு சமூகமாக, நாம் அனைவரும் நமக்குள் கேட்க வேண்டும்.

எந்தவொரு தேசத்தின் வளா்ச்சிக்கும், வெற்றிக்கும் பெண்களின் பாதுகாப்பும், கண்ணியமும் முக்கியமானதாகும். நமது நாட்டில் உள்ள பெண்களின் கண்ணியத்தை பாதுகாப்பதற்கும், அவா்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள பெண்கள் வலிமை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தி, தடைகளை மீறி முன்னேறி வருகின்றனா். அவா்களுக்கான மரியாதையை அதிகரித்து; எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொது விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நூற்றாண்டுகள் பழமையான நம் கலாசாரத்தில், நமது நாட்டை தாய்நாடு, தாயகம் என குறிப்பிடுகிறோம். இதன் மூலம், பெண்களுக்கு மிகுந்த மரியாதையை வழங்கும் பாரம்பரியம் நம்மிடம் இருப்பதை அறிய முடிகிறது. எனவே, அந்த மரபை பாதுகாப்போம் என்றாா்.

சட்டங்கள் மட்டும் போதாது: நாட்டில் தனியாா் மற்றும் பொது இடங்களில் பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்கான சட்ட விதிகளுக்கு பஞ்சமில்லை; ஆனால், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘ஆணாதிக்க சமூக அணுகுமுறையை’ சமுதாயத்தில் கைவிட வேண்டும் என்று ‘ஷீ சக்தி-2024’ மாநாட்டில் உரையாற்றிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கூறினாா்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!