பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ், பாஜகவின் விருப்பம்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

வாஷிங்டன்: பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை விரும்புவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், டெக்ஸôஸ் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பெண்களைப் பற்றிய இந்திய ஆண்களின் அணுகுமுறை மாற வேண்டும். பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதை நான் ஆதரிக்கிறேன்.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா அமலாவதன் மூலம் இது சாத்தியமாகும். பெண்கள் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் ஆதரவளிக்க வேண்டும். அவர்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும்.

பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர்கள் உணவு சமைத்துக் கொண்டும் அதிகம் பேசாமலும் இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் விரும்புகின்றன. ஆனால் தாங்கள் விரும்பியதை பெண்கள் செய்ய வேண்டும் என்று நாங்கள் (காங்கிரஸ் கட்சி) விரும்புகிறோம்.

இந்தியா என்பது ஒரே சிந்தனை என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஆனால் இந்தியா என்பது பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போலவே ஒவ்வொருவரும் பங்கேற்பதை நாங்கள் விரும்புகிறோம். தங்களின் ஜாதி, மொழி, மதம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொருவரும் கனவுகாண அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இது ஒரு போராட்டமாகும். இந்தியப் பிரதமர் அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் தொடுக்கிறார் என்பதை இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தேர்தலின்போது புரிந்து கொண்டனர். இந்திய அரசியலில் அன்பு, மரியாதை, அடக்கம் ஆகியவை காணப்படுவதில்லை. இந்தப் பண்புகளை இந்திய அரசியலுக்குக் கொண்டுவரவே நான் முயற்சிக்கிறேன் என்றார்.

திறமைசாலிகளுக்கு மரியாதை இல்லை: டல்லாஸ் நகரில் டெக்ஸôஸ் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, "திறமைசாலிகளுக்கு இந்தியாவில் மரியாதை இல்லை' என்று ராகுல் குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் பேசுகையில், "இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வேலையில்லாத் திண்டாட்டத்தைச் சந்திக்கின்றன. ஆனால், சீனாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை. ஏனெனில் உலகளாவிய உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவில் திறமைக்குப் பஞ்சமில்லை. திறமைக்கு மரியாதைதான் இல்லை. உற்பத்தி விவகாரத்தில் இந்தியாவால் சீனாவுடன் போட்டி போட முடியும்.

இந்தியாவில் திறமைசாலிகளுக்கு மரியாதை இல்லாததால் நாட்டை விட்டுச் செல்கின்றனர்.

உங்களுக்கு மஹாபாரத இதிகாசத்தில் வரும் ஏகலைவனின் கதை தெரியுமா? இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒவ்வொரு நாளும் லட்சகணக்கான ஏகலைவனின் கதைகள் அரங்கேறுவதை உணர வேண்டும்.

எதிர்க்கட்சி என்பது மக்களின் குரலாகும். இந்திய மக்களின் பிரச்னைகளை எங்கே, எவ்வாறு என்னால் எழுப்ப முடியும் என்பது குறித்து நீங்கள் யோசிக்கிறீர்கள். நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிந்தனைகள் மற்றும் வார்த்தைகளின் இனிமையான போராகும்' என்றார்.

மஹாபாரதத்தில் போர்க்கலைகளில் வல்லவரான துரோணாச்சாரியரின் சிலையை வைத்து வில்வித்தையை கற்றுக் கொண்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவரான ஏகலைவனிடம் குரு தட்சிணையாக அவரது வலது கட்டைவிரலை வெட்டித் தருமாறு துரோணாச்சாரியார் கேட்கும் சம்பவம் இடம்பெறுகிறது. ஏகலைவனின் மிகவும் கடினமான அந்த தியாகத்தை ராகுல் காந்தி தனது பேச்சில் நினைவுகூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்