பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுழலில், சுமங்கலி விரத தினமான ‘கர்வா சௌத்’ விரதம் கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை (அக். 20), உத்தரப் பிரதேசத்தில் பெண் காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

கான்பூர் அருகேயுள்ள சென்-பாஸ்சிம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு, தனது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண் காவலரை, அவருடைய வீடு அமைந்திருக்கும் பகுதியில் வசித்து வரும் ஆண் நபர் ஒருவர் தனது வாகனத்தில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்கிவிடுவதாக அழைத்துள்ளார். தனக்கு அறிமுகமான நபர் என்பதால் அவருடன் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார் பெண் காவலர்.

இந்த நிலையில், வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் திடீரென வாகனத்தை ஆள் நடமட்டமில்லாத பகுதிக்கு ஓட்டிச் சென்ற அந்த நபர், அங்கு பெண் காவலரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள பெண் காவலர் அயோத்தியில் ரிசர்வ் காவல் படையில் தலைமைக் காவலராக சேவையாற்றி வருபவர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ‘கர்வா சௌத்’ விரத்தத்துக்கான விடுமுறையில் தனது சொந்த ஊரான கான்பூர் அருகேயுள்ள கிராமத்துக்கு செல்லும் வழியில் மேற்கண்ட அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

தன்னிடம் மிருகத்தனமாக நடந்துகொண்ட அந்த நபரிடமிருந்து ஒருவழியாக தப்பித்து ஓடிய அந்த காவலர், சம்பவ இடத்தின் அருகாமையில் தென்பட்ட காவல் சோதனைச் சாவடிக்குச் சென்று புகாரளித்துள்ளார். இதைத்தொடர்ந்து உடனடியாக விசாரணையை தொடங்கிய காவல்துறை, சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்ற அந்த நபரை சில மணி நேரத்திலேயே தேடிப் பிடித்து கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் இன்று(அக். 21) தெரிவித்துள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!

மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவர் குழு!