கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9-ந்தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், பெண் டாக்டர் கொலை வழக்கில் குற்றவாளியை காக்கும் முயற்சி சந்தேகத்தை எழுப்புகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான, மனிதாபிமானமற்ற சம்பவம் குறித்த விவரங்கள் அடுத்தடுத்து அம்பலமாகி வருவது, மருத்துவர் சமூகம் மற்றும் பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற மனநிலையை உருவாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி, மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது.
மருத்துவக் கல்லூரியைப் போன்ற இடத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், எந்த அடிப்படையில் பெற்றோர்கள் தங்கள் மகள்களை வெளிநாட்டில் படிக்க வைப்பார்கள்? என்று சிந்திக்கத் தூண்டியுள்ளது இந்த சம்பவம். நிர்பயா வழக்குக்குப் பிறகு இயற்றப்பட்ட கடுமையான சட்டங்கள் கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுக்காமல் தோல்வியடைந்தது ஏன்?
ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், கத்துவா முதல் கொல்கத்தா வரையிலும், ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு பிரிவினரும் கூடி தீவிர விவாதம் செய்து பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த தாங்க முடியாத துன்பத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக நான் நிற்கிறேன். அவர்களுக்கு அனைத்து வகையிலும் நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்."
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.