பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உரிமை மீறல் தொடர்பான நோட்டீஸுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், சட்டப்பேரவைக்குள் தடைசெய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

நோட்டீஸ் 2 முறை ரத்துஇந்த நோட்டீஸை உயர் நீதிமன்றம் இருமுறை ரத்து செய்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அதிமுக ஆட்சி காலத்தில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பு விவரம்: சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றது தொடர்பாக உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீஸை 2-வது முறையாக பிறப்பித்துள்ளது. அந்தநோட்டீஸ் முழுமையடைவதற்கு முன்பாகவே இந்த வழக்குதொடரப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸ் ஒரு முடிவை எட்ட வேண்டும்.

திமுக வாதம் ஏற்க முடியாதது இதுதொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்க உரிமைக் குழுவுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது.

உரிமைக்குழு எந்தக் கட்சியையும் சேர்ந்தது கிடையாது. ஆட்சிமாற்றத்துக்கு பிறகு முந்தைய பேரவை சார்பில் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸும் காலாவதியாகி விட்டது என்ற திமுக தரப்பு வாதம் ஏற்புடையதல்ல.

மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். சட்டப்பேரவையின் விதிகளுக்கு எதிராக செயல்படுவதை அனுமதித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும்.

எனவே ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து தனி நீதிபதி கடந்த 2021-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

எனவே, இந்த உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் உரிமைக் குழுவிடம் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். சட்டப்பேரவை உரிமைக்குழு உரிய விதியை பின்பற்றி, இதுகுறித்து விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்