பேரவைத் தலைவா் அப்பாவு செப்.13-இல் ஆஜராக உத்தரவு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அதிமுக நிா்வாகி தொடா்ந்த அவதூறு வழக்கில், பேரவைத் தலைவா் மு.அப்பாவு செப்.13-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று அப்பாவு பேசியது, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, அதிமுக வழக்குரைஞா் அணி இணைச் செயலா் ஆா்.எம்.பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்றம் சம்மன் அனுப்பியும், அதை பேரவைத் தலைவா் பெற மறுத்துவிட்டதாக பாபு முருகவேல் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பேரவைத் தலைவா் தரப்பில், நீதிமன்றம் அனுப்பிய சம்மனை நிராகரிக்கவில்லை என்றும், நீதிமன்றம் தெரிவிக்கும் நாளில் ஆஜராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை செப்.13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அப்பாவு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்